×

கில் 104, ஷ்ரேயாஸ் 105, சூரியகுமார் 72*; இந்தியா அபார ரன் குவிப்பு: மழையால் ஆட்டம் பாதிப்பு

இந்தூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், அதிரடியாக விளையாடிய இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன் குவித்தது. ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. அந்த அணியில் கேப்டன் கம்மின்சுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், ஸ்டீவன் ஸ்மித் தலைமையேற்றார். இடது கை வேகப் பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஹென்றி ஜான்சன் (27 வயது) அறிமுக வீரராக இடம் பெற்றார்.

ருதுராஜ் கெயிக்வாட், ஷுப்மன் கில் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். ருதுராஜ் 8 ரன் எடுத்து ஹேசல்வுட் வேகத்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி வசம் பிடிபட்டார். இதையடுத்து, கில்லுடன் ஷ்ரேயாஸ் அய்யர் இணைந்தார். அபாரமாக விளையாடிய இந்த ஜோடி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை தவிடு பொடியாக்கியது. இந்தியா 9.5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 79 ரன் எடுத்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில், கில் – ஷ்ரேயாஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 200 ரன் சேர்த்து அசத்தியது.

ஷ்ரேயாஸ் 105 ரன் (90 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அபாட் பந்துவீச்சில் ஷார்ட் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கில் 104 ரன் (97 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி கிரீன் பந்துவீச்சில் வெளியேறினார். கேப்டன் ராகுல் 52 ரன் (38 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), இஷான் கிஷன் 31 ரன் (18 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.

கடைசி கட்டத்தில் சூரியகுமார் யாதவ் அதிரடியில் இறங்க, இந்திய ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. கிரீன் வீசிய 44வது ஓவரில் சூரியா தொடர்ச்சியாக 4 இமாலய சிக்சர்களைத் தூக்கி மிரட்டினார். இந்தியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன் குவித்தது. சூரியகுமார் 72 ரன் (37 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), ஜடேஜா 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் கிரீன் 2, ஹேசல்வுட், அபாட், ஸம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 50 ஓவரில் 400 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா ஷார்ட் (9), கேப்டன் ஸ்மித் (0) இருவரும் பிரசித் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க… அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. அந்த அணி 9 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 56 ரன் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது.

அப்போது வார்னர் 26, லாபுஷேன் 17 ரன் எடுத்திருந்தனர். சிறிது நேர தாமதத்துக்குப் பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது, ஆஸி. அணிக்கு 33 ஓவரில் 317 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. லாபுஷேன் 27 ரன், வார்னர் 53 ரன் (39 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ஜோஷ் இங்லிஸ் 6 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆஸி. 14.5 ஓவரில் 101 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.

The post கில் 104, ஷ்ரேயாஸ் 105, சூரியகுமார் 72*; இந்தியா அபார ரன் குவிப்பு: மழையால் ஆட்டம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Gill 104 ,Shreyas 105 ,Suryakumar ,India ,Australia ,Gill ,Shreyas ,Dinakaran ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?