×

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.20 கோடியில் நவீன வசதிகளுடன் 3 இடத்தில் நாய் கருத்தடை மையம்: பணிகள் மும்முரம்

 

சென்னை, செப்.25: இந்தியாவிலேயே முதன்முறையாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 3 இடங்களில் ரூ.20 கோடியில் நாய் கருத்தடை மையம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் கும்பலாக சூழ்ந்து, கடிக்கப் பாய்வதும், இதனால் உயிருக்கு பயந்து ஆபத்தான முறையில் அவர்கள் வாகனங்களை ஓட்டுவதும், பலர் தடுமாறி விழுந்து காயமடைவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

சாலையோர குப்பை தொட்டிகளில் உள்ள உணவு கழிவுகளை சாப்பிட கூட்டமாக சுற்றி திரியும் தெரு நாய்கள், ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டு, சாலையில் திடீரென ஓடுவதால், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. ஒருமுறை இந்த நாய்கள் கருத்தரித்தால் குறைந்தது 5 குட்டிகளாவது ஈன்றெடுக்கும். இதை கட்டுப்படுத்த தவறினால் அது பல மடங்கு பெருகி மக்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும். சென்னையில் இவ்வாறு பெருகி வரும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, சாலையில் திரியும் நாய்களை பிடிக்க, ஒவ்வொரு மண்டலத்திலும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவானது தினமும் ஆய்வு மேற்கொண்டு எந்த பகுதியில் நாய்கள் சுற்றி திரிகிறதோ, அவைகளை பிடித்து வாகனங்கள் மூலம் திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட பேசின் பாலம் மற்றும் கண்ணம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு நாய்களின் உடல்நிலை, உடல் வெப்பநிலை, எடை போன்றவற்றை பரிசோதனை செய்த பிறகு, இனக்கட்டுப்பாடு செய்யப்படுகிறது. அவ்வாறு பரிசோதிக்கப்படும்போது, ஏதேனும் உடல்நலக் குறைவுகள் இருந்தால், அந்த நாய்கள் தனியாக கண்காணிக்கப்பட்டு, முறையான சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு கால்நடை மருத்துவர்கள் மூலம் இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் 1996ம் ஆண்டு முதல் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. தற்போது உள்ள நாய் கருத்தடை மையங்களில் போதிய வசதிகள் இல்லாததால், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் இந்தியாவிலேயே முதன்முறையாக நவீன முறையில் பல்வேறு வசதிகளுடன் நாய் கருத்தடை மையம் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய 3 இடங்களில் சுமார் ரூ.19.7 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மையங்கள் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தை கொண்டிருக்கும். அதில் மருத்துவர்களுக்கான அறை, நாய்களுக்கு கருத்தடை செய்த பின்னர் ஓய்வளிக்க அறை, நவீன ஆபரேஷன் தியேட்டர், மருந்து அறை, நாய்களுக்கு உணவு அளிக்க சமையல் அறை, கழிப்பறை, பரிசோதனை அறை, ரத்த பரிசோதனை ஆய்வகம், ஒவ்வொரு மையத்திலும் தனித்தனியாக 130 கெட்டில்கள் என 3 மையங்களிலும் 390 கெட்டில்கள் மற்றும் நாய்கள் குரைக்கும் போது அக்கம் பக்கத்தினருக்கு தொல்லையாக இல்லாமல் இருக்க சுவர், லிப்ட், சாய்தளம் என பல வசதிகளோடு அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அடுத்தாண்டு தொடக்கத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். இந்த 3 கருத்தடை மையத்தில் ஒரு நாளைக்கு சுமார் 30 நாய்களுக்கு கருத்தடை செய்யும் திறனை அதிகரித்து ஆண்டுக்கு சுமார் 27,000 அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.20 கோடியில் நவீன வசதிகளுடன் 3 இடத்தில் நாய் கருத்தடை மையம்: பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : India ,Chennai ,Singara ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...