×

மணிப்பூரில் தேசவிரோத செயல்களில் ஈடுபட திட்டம்? அசாம் ரைபிள்ஸ் படை வாகனங்கள் போல் அடையாளம் மாற்றப்பட்ட டிரக்குகள்: எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

இம்பால்: மணிப்பூரில் கிளர்ச்சி குழுவினர் சிலர் தேசவிரோத செயல்களில் ஈடுபட முயற்சிப்பதாக அசாம் ரைபிள்ஸ் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் பெரும்பான்மையாக உள்ள மெய்டீஸ் சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து தர எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3ம் தேதி நாகா, குக்கி பழங்குடியின மக்கள் பேரணி நடத்தினர். அப்போது மெய்டீஸ் சமூகத்தினரும் நடத்திய போட்டி பேரணியில் வன்முறை வெடித்து கலவரமாக மாறியது.

இந்த சம்பவத்தில் 175க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த அசாம் ரைபிள்ஸ் படை, துணை ராணுவப் படை குவிக்கப்பட்டது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் அசாம் ரைபிள்ஸ் படை, துணை ராணுவப் படையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் கிளர்ச்சி குழுவை சேர்ந்தவர்கள் மாநிலத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக அசாம் ரைபிள்ஸ் படை சுராசந்த்பூர் காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது.

அதில், “கிளர்ச்சி குழுவை சேர்ந்தவர்களின் உதவியுடன் சிலர் சந்தைகளில் இருந்து டிரக்குகளை வாங்கி, அதை அசாம் ரைபிள்ஸ் படை வாகனம் போல் வண்ணம் பூசி அடையாளத்தை மாற்றி உள்ளனர். சிவில் வாகனங்களை அசாம் ரைபிள்ஸ் படை வாகனங்களை போல் மாற்றுவது, அசாம் ரைபிள்ஸ் படையின் புகழை கெடுக்கும் முயற்சி.
மேலும் வாகன தணிக்கை, கண்காணிப்புகளில் இருந்து தப்பித்து மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மணிப்பூர் காவல்துறை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post மணிப்பூரில் தேசவிரோத செயல்களில் ஈடுபட திட்டம்? அசாம் ரைபிள்ஸ் படை வாகனங்கள் போல் அடையாளம் மாற்றப்பட்ட டிரக்குகள்: எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Assam Ripples Force Vehicles ,Imphal ,Assam Ribles ,Dinakaran ,
× RELATED டெல்லி உலக புத்தக கண்காட்சியில் முதல்முறையாக தமிழ்நாடு அரங்கு!!