சேலம்: பாஜ கூட்டணி விவகாரம் தொடர்பாக சேலத்தில் எடப்பாடி முக்கிய ஆலோசனை நடத்தினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள தனது வீட்டில் கடந்த 3 நாட்களாக முகாமிட்டிருந்தார். இச்சூழலில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சால் அதிமுக-பாஜ கூட்டணியில் அதிர்வலை ஏற்பட்டது. அதிமுக கூட்டணியில் பாஜ இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மேலும், டெல்லிக்கு முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் சென்று அமித்ஷாவை சந்தித்து அண்ணாமலையை மாற்ற கோரிக்கை விடுக்க முயற்சித்தனர். அது தோல்வியில் முடிந்து திரும்பினர்.
அதிமுக, பாஜ மாநில தலைமையிடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், சேலத்தில் முகாமிட்டிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வந்து சந்தித்து பேசிச் சென்றனர். இந்நிலையில் நேற்று மதியம் 1.30 மணிக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சேலம் வந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நீடித்தது.
இதேபோல், சேலத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் நேற்று எடப்பாடியை சந்தித்தனர். அப்போது, இன்று சென்னையில் நடக்கும் மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு வரும்படியும் அதில் முக்கிய முடிவு எடுக்கலாம் என எடப்பாடி பழனிசாமி கூறியதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் 2.50 மணிக்கு சேலம் நெடுஞ்சாலைநகர் வீட்டில் இருந்து கோவைக்கு காரில் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.
The post பாஜ கூட்டணி விவகாரம் சேலத்தில் எடப்பாடி முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.