×

மீன்பிடி வலை, மீன்கள் பறிப்பு நாகை மீனவர்களை தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

நாகப்பட்டினம்: நாகை மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்கள், வலைகளை பறிமுதல் செய்து விரட்டியடித்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி(56). இவரது பைபர் படகில் மகன்கள் பிரதீப் (34), பிரகாஷ்(32), பிரவீன்(30), திருமுருகன்(26) ஆகிய 4 பேரும் செருதூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 21ம் தேதி இரவு மீன்பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு கிழக்கே 15 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 2 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர், மீனவர்களை கட்டையால் தாக்கிவிட்டு அவர்கள் வைத்திருந்த 550 கிலோ மீன்பிடி வலை, 4 செல்போன்கள், ஒரு ஜிபிஎஸ் கருவி, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மீன்கள் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பினர்.

இதில் காயமடைந்த மீனவர்கள் செருதூர் வந்து, பஞ்சாயத்தார்களிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகவல் அறிந்த தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை கடலோர காவல்குழும போலீசார் மருத்துவமனை வந்து பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தியதில், இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்த படகு ஒன்றில் துர்க்கை அம்மன் என எழுதி இருந்தது. அவர்கள் தமிழில் பேசி ஆயுதங்களை காட்டி மிரட்டி கட்டையால் தாக்கி அனைத்தையும் பறித்து சென்றதாக தெரிவித்தனர். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post மீன்பிடி வலை, மீன்கள் பறிப்பு நாகை மீனவர்களை தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Velankanni… ,Atakasam ,
× RELATED இயற்கை இடர்பாடுகளில் இருந்து மக்களை...