×

பட்டியல் இனத்தவரை கான்டிராக்டராக பதிவு செய்ய விதிமுறைகளை தளர்த்தி 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: முதல்வருக்கு எஸ்சி, எஸ்.டி.பணியாளர் சங்கம் கோரிக்கை

சென்னை: பட்டியல் இனத்தவரை ஒப்பந்ததாரராக பதிவு செய்வதற்கான விதிமுறைகளை தளர்த்தி 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு எஸ்சி, எஸ்.டி.பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி., எஸ்.டி. பணியாளர் நலச்சங்கம் தலைவர் டி.மணிமொழி, பொதுசெயலாளர் டி.மகிமைதாஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: அண்டை மாநிலமான கர்நாடகா மாநிலத்தில் எஸ்.சி, எஸ்டி. ஒப்பந்ததாரர் சங்கத்தில் அரசு வேலைகளை எடுத்து செய்யக்கூடிய பதிவு பெற்ற 15 ஆயிரம் ஒப்பந்ததாரர்கள் இருப்பதாக சொல்கிறது ஓர் புள்ளி விவரம்.

பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் பொதுப்பணித்துறை ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்ததாரராக பதிவு செய்வதில் நிறைய சிக்கல்கள் நடைமுறையில் உள்ளன. இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை தீர்க்கவே கர்நாடக மாநில அரசு பட்டியல் இனத்தவர் ஒப்பந்ததாரராக பதிவு செய்வதற்கு, சொத்து மதிப்பில் சில விதிமுறைகளை தளர்த்தி இருக்கிறது. ஒப்பந்ததாரர்கள் விஷயத்தில் கர்நாடக மாநிலம் போல, தமிழ்நாட்டிலும் பதிவு செய்வதில் விதிமுறைகளை தளர்த்தி, 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது மட்டுமே பட்டியல் இனத்தவரை அதிகாரம் அல்லது உரிமை அளித்தலை நோக்கி நகர்த்தும் சமூக நீதியின் செயல்பாடாக இருக்கும். இதனை ஆக்கப்பூர்வமாக நடைமுறையாக்கிட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பட்டியல் இனத்தவரை கான்டிராக்டராக பதிவு செய்ய விதிமுறைகளை தளர்த்தி 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: முதல்வருக்கு எஸ்சி, எஸ்.டி.பணியாளர் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : SC ,ST ,Chennai ,Chief Minister ,SC, ST ,Union ,CM ,Dinakaran ,
× RELATED சேரி என்ற வார்த்தைக்கு மன்னிப்பு...