×

சென்னையில் 4 இடங்களில் 2,148 விநாயகர் சிலைகள் கரைப்பு: அமைதியாக முடிந்த ஊர்வலங்கள், போலீசார் திட்டமிட்டு செயல்பட்டனர்

சென்னை: காவல்துறை எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம், சென்னை, ஆவடி, தாம்பரம் என 26 வழித்தடங்கள் மூலம் 2,148 சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 4 இடங்களில் கரைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18ம் தேதி கொண்டாடப்பட்டது. சென்னை பெருநகர காவல் எல்லையில் இந்த ஆண்டு 1,519 சிலைகளும், தாம்பரம் மாநகர காவல் எல்லையில் 425 சிலைகள், ஆவடி மாநகர காவல் எல்லையில் 204 சிலைகள் உட்பட மொத்தம் 2,148 சிலைகளை இந்து அமைப்புகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர். 6 நாட்கள் வழிபாடு முடிந்து 2 நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது. குறிப்பாக, பட்டினப்பாக்கம், பல்கலை நகர், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்றம் என 4 இடங்கள் மட்டுமே மாநகர காவல் துறை அனுமதி வழங்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் எல்லையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை 17 வழித்தடங்களிலும், தாம்பரம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை 4 வழித்தடங்கள், ஆவடி பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை 5 வழித்தடங்கள் என மொத்தம் 26 வழித்தடங்களில் மட்டும் ஊர்வலமாக கொண்டு வந்து அனுமதிக்கப்பட்ட 4 இடங்களில் சிலைகள் கரைக்கப்பட்டது. முதல் நாளான நேற்று முன்தினம் பாரதிய சிவசேனா அமைப்பினருக்கு சிலைகளை கரைக்க போலீசார் அனுமதி வழங்கினர். 2வது நாளாக நேற்று இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சிலைகள் கரைக்க போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர்.

இந்நிலையில், சென்னை மாநகர காவல் எல்லையில் ஜாம்பஜார் பகுதியில் உள்ள மசூதி வழியாக இந்து முன்னணி மாநில தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் அங்கு குவிக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் போலீசார், இந்து முன்னணியினரின் ஊர்வலத்தை மாற்று வழியில் அனுப்பி வைத்தனர். அதேபோல், சென்னை மாநகர பகுதிகளில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க், தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் தலைமையில் மொத்தம் 16,500 போலீசார் மற்றும் 2 ஆயிரம் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

பட்டினப்பாக்கம் கடற்கரையில் மட்டும் கடந்த 2 நாட்களில் ஆயிரம் சிலைகள் கரைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் மாநகர தெற்கு கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் கிரேன் மற்றும் கன்வேயர் பெல்ட் என சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், வாகனத்தில் வந்த சிலைகளை அதிக நேரம் நிறுத்தி வைக்காமல் உடனுக்குடன் கிரேன் உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டது. இதேபோல், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்றம் என மொத்தம் 4 இடங்கள் 2,148 சிலைகள் அமைதியான முறையில் சிலைகள் கரைக்கப்பட்டது. இதில் நேற்று முன்தினம் 200 சிலைகளும், நேற்று மீதமிருந்த 1,948 சிலைகளும் 4 இடங்களில் கரைக்கப்பட்டது. பட்டினப்பாக்கம் கடற்கரையில் மட்டும் 1,197 சிலைகள் கரைக்கப்பட்டது.

பெரிய சிலைகளுடன் வீடுகளில் வழிபாடு செய்யப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய சிலைகளும் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் வந்து தனது குடும்பத்தினருடன் பொதுமக்கள் சூடம் ஏற்றி கடலில் கரைத்தனர்.போலீசாரின் திட்டமிட்ட பாதுகாப்பு நடவடிக்கையால் இந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக முடிந்தது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து போலீசாருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்தார்.

பட்டாசு வெடித்தவருக்கு கண் பார்வை பாதிப்பு: இந்து மக்கள் முன்னணி சார்பில் நேற்று மாலை பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலையை இறக்கி கரைக்கும் முன்பு பட்டாசு வெடித்தனர். அப்போது, பட்டாசு வெடிக்காததால், கீழே குனிந்து பார்த்தபோது எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடித்ததில் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (19) என்பவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு கண்கள் பாதிக்கப்பட்டது. அதற்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

*ராயப்பேட்டை, ஆர்.கே.நகரில் துணை கமிஷனர்கள் முன்னிலையில் மத நல்லிணக்க வழிபாடு
சென்னையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று பொதுமக்கள் வழிபாடு முடிந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. அப்போது ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் சன்னதி முதல் தெருவில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கடலில் கரைக்க எடுத்து செல்லும் முன்பு, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி ஒருங்கிணைந்த மதநல்லணிக்க வழிபாடு நடத்தப்பட்டது.

மயிலாப்பூர் துணை கமிஷனர் ரஜத் சதுர்வேதி தலைமையில் நடந்த வழிபாட்டில் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தேங்காய் உடைத்தும், சூடம் ஏற்றி வழிபாடு நடத்தி விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். அதேபோல், ஆர்.கே.நகர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட நேதாஜி நகர் 3வது தெருவில் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சக்திவேல் தலைமையில் மேளம் தாளத்துடன் மதநல்லிணக்க வழிபாடு நடத்தப்பட்டது. அதில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னையில் 4 இடங்களில் 2,148 விநாயகர் சிலைகள் கரைப்பு: அமைதியாக முடிந்த ஊர்வலங்கள், போலீசார் திட்டமிட்டு செயல்பட்டனர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Avadi ,Tambaram ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...