பூந்தமல்லி: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பொய் புகார் அளித்து அவதூறு ஏற்படுத்தி வருவதாக, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை நிலைய செயலாளர் புகார் அளித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றிவிட்டார் என வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். பின்னர், அப்புகாரின்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். தொடர்ந்து சீமான் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையே, கடந்த 15ம் தேதி நள்ளிரவு சீமான் மீது, போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி திடீரென அறிவித்தார்.
இதையடுத்து போலீசாரின் சம்மனை ஏற்று, கடந்த வாரம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். எனினும், இன்றுவரை சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமிக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, இருவரும் மாறி மாறி சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில், ‘என் மீது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறு பரப்பி வருகிறார். இதனால் தான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். எனது தற்கொலைக்கு சீமான்தான் காரணம்’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பொய் புகார் அளித்து நடிகை விஜயலட்சுமி அவதூறு பரப்பி வருவதாக, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேற்று மாலை நாம் தமிழர் கட்சி தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் புகார் அளித்துள்ளார். அப்புகாரில், ‘தமிழர் முன்னேற்ற படை கட்சி தலைவர் வீரலட்சுமியின் தூண்டுதல்பேரில், நடிகை விஜயலட்சுமி பணம் பறிக்கும் நோக்கில் சீமான்மீது பொய் புகார் அளித்து வந்துள்ளார். அவரது திட்டம் நிறைவேறாததை அறிந்து, அப்புகாரை வாபஸ் பெற்று சென்றுவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி மீண்டும் பணம் பறிக்கும் நோக்கில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்மீது அவதூறு பரப்புவதுடன், தனது தற்கொலை முயற்சிக்கு அவர்தான் காரணம் என வீடியோ வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. சீமான்மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் நடிகை விஜயலட்சுமிமீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர். இப்புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post சீமான் அவதூறு பரப்புவதாக கூறி நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட தற்கொலை முயற்சி வீடியோ: நாம் தமிழர் கட்சி நிர்வாகி போலீசில் புகார் appeared first on Dinakaran.