சென்னை: பாஜகவின் சோதனை பூச்சாண்டிக்கெல்லாம் அதிமுக பயப்படாது என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘அதிமுக – பாஜகவுடன் கூட்டணி இல்லை என கடந்த 18ம் தேதி அறிவித்த நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமில்லை. நாளை அதிமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தப்பட உள்ளன.
அக்கூட்டத்தின் வாயிலாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அதன்படி, நான் எந்தவித கருத்து கூறினாலும், அது உசீதமானதாக இருக்காது. கூட்டணி இல்லை என்ற நிலையில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ அமித்ஷாவை சந்திக்க கூடாதா? ஏன் நாட்டின் நிலைமைகளை குறித்து பேசகூடாது? அதில் என்ன உள்ளது. எங்களுக்கு மடியில் கனமில்லை வழியிலும் பயமில்லை. வருமான வரி சோதனை அல்லது அமலாக்கத்துறை சோதனை என பூச்சாண்டி காட்டும் வேலைகளுக்கு எல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம்.
எத்தனையோ சோதனைகளை கண்டவர்கள் நாங்கள். குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது வழக்கு, முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு என பல இருந்தாலும், எங்களது கட்சி இதுவரை எந்த ஒரு தொய்வையும் சந்தித்ததில்லை. மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுவது எங்களின் கடமை. அதனை நோக்கி பயணிக்கிறோம். அதேபோல, தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை என்று ஒன்று உள்ளதை அண்ணாமலை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.
The post பாஜகவின் சோதனை பூச்சாண்டிக்கெல்லாம் அதிமுக பயப்படாது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி! appeared first on Dinakaran.