×

வானூர் அருகே விவசாயி வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை

 

வானூர், செப். 24: விவசாயி வீட்டின் கதவை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம்(67), விவசாயி. இவர் மனைவியுடன் வசித்து வரும் நிலையில், கடந்த மாதம் சென்னையில் உள்ள தன்னுடைய மகன் வீட்டிற்கு மனைவியுடன் சென்றிருந்தார். இதனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. அதனை உறவினர் ஒருவர் அவ்வப்போது பார்த்து வந்துள்ளார். மேலும் வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் விளக்கேற்றி வைப்பாராம்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை என்பதால் மாலையில் விளக்கேற்றுவதற்காக திருவேங்கடம் வீட்டுக்கு உறவினர் வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து திருவேங்கடத்துக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் வானூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், 2 அறைகளில் இருந்த மர பீரோ மற்றும் ஸ்டீல் பீரோவை உடைத்து வெள்ளி தட்டு, இரண்டு பெரிய குத்துவிளக்கு, 2 காமாட்சி விளக்குகள் உள்பட 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் அரை பவுன் தங்க நாணயம், அரை பவுன் கம்மல், 3 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும். இதை தொடர்ந்து விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கை ரேகைகளை சேகரித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post வானூர் அருகே விவசாயி வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Vanur ,
× RELATED வியாபாரியிடம் ₹8 ஆயிரம் பறித்த 2 திருநங்கைகள் கைது