×

படகு இல்லம் செல்லும் நடைபாதை சீரமைக்கும் பணிகள் துவக்கம்

 

ஊட்டி,செப்.24: ஊட்டி படகு இல்லம் செல்லும் சாலையோரத்தில் உள்ள நடைபாதை பழுதடைந்து இருந்த நிலையில் அதனை சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்கின்றனர்.

இதில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மூலம் சென்றாலும் ஒரு சில சுற்றுலா பயணிகள் நடந்தே சென்று சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். குறிப்பாக, ஊட்டி படகு இல்லம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து படகு இல்லம் வரை உள்ள ஒரு கி.மீ., நடந்தே செல்கின்றனர். இது போன்று நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக சாலை ஓரத்தில் அலங்கார நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் ஒரு சில இடங்களில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டு நடைபாதை பழுதடைந்துள்ளது.

இதனால் இந்த நடைபாதையில் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மற்றும் உள்ளூர் மக்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். எனினும் படகு இல்ல நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் இதனை சீரமைப்பதில் மெத்தனம் காட்டி வந்தது. இந்நிலையில் இது தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த நடைபாதையை சீரமைக்கும் பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post படகு இல்லம் செல்லும் நடைபாதை சீரமைக்கும் பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty Boat House ,
× RELATED கோடை சீசன் நடவு பணிகளுக்காக ஊட்டி...