சிவகாசி, செப். 24: சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரை ஆக்கிரமிப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் வீடு, கடைகள் கட்டி இருந்தனர். சிவகாசி வட்டார வரி செலுத்துவோர் சங்கத்தினர் இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற கோரி கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து கோர்ட் உத்தரவின் பேரில் சிறுகுளம் கண்மாய் கரை பகுதியிலிருந்த 100க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது. இங்கு வீடுகள் கட்டி குடியிருந்தவர்களுக்கு ஆணையூர் சமத்துவபுரம் அருகே குடியிருப்பு வளாகம் கட்டித் தரப்பட்டது.
இதனால் தற்போது சிறுகுளம் கண்மாய் கரை பகுதியில் உள்ள காலி இடம் வாகன நிறுத்தமாக மாறிவிட்டது. சாலையோர வியாபாரிகள் சிலரும் இப்பகுதியில் கடைகளை அமைத்துள்ளனர். இதனால் விருதுநகர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துக்கள் அதிகரிப்பது தொடர்கதையாகி வருகிறது.சிறுகுளம் கண்மாய் கரை பகுதியில் ரூ.5 கோடி மதிப்பில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பூங்காவில் நடைமேடை, சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது பூங்கா அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சிறுகுளம் கண்மாய் கரை பகுதியில் பொழுதுபோக்கும் வகையில் நடைமேடையுடன் கூடிய பூங்கா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சிவகாசியில் சிறுகுளம் கண்மாய் பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா தேவை: பொதுமக்கள் ஆவல் appeared first on Dinakaran.
