×

செங்கல்பட்டு அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை திருட்டு: போலீசார் விசாரணை

 

சென்னை: செங்கல்பட்டு அருகே 16 கிலோ எடைகொண்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டியுள்ளனர். செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு, வழக்கம்போல் நேற்று முன்தினம் பூஜை முடிந்து கோயிலை பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். நேற்று காலை கோயிலை சுத்தம் செய்ய வந்தபோது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது கோயிலில் இருந்த 16 கிலோ ஐம்பொன் அம்மன் சிலை திருடு போனது தெரியவந்தது. உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஐம்பொன் சிலையுடன், 11 கிலோ பித்தளை விளக்கும் திருடு போனது தெரியவந்தது. திருட்டு தொடர்பாக சிங்கபெருமாள்கோவில், திருத்தேரி பகத்சிங் நகரை சேர்ந்த செல்லா (28) கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளின் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி மகேந்திரா சிட்டி பகுதியில் 24 மணி நேரமும் மக்கள் மற்றும் போக்குவரத்து நடமாட்டம் இருக்கும். அங்குள்ள கோயிலில் இருந்து ஐம்பொன் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடப்பட்ட சிலையின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது.

The post செங்கல்பட்டு அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை திருட்டு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chennai ,Aimbon ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...