×

மாநகர போக்குவரத்து கழகத்தின் புதிய பேருந்துகளில் கதவுகள் கட்டாயம்: அதிகாரிகள் தகவல்

 

மாதவரம்: பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இனி வரும் புதிய பேருந்துகளில் கட்டாயம் கதவுகள் அமைக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலர் மாநகர பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் சிலர் ஆட்டம் போட்டும், பாட்டு பாடியும், பேருந்துகளின் ஜன்னல்களில் தொங்கியும், சிலர் மேற்கூரையிலும் ஏறி, ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். சில நேரங்களில், பலர் தவறி விழுந்து விபத்திலும் சிக்குகின்றனர்.

மாணவர்களின் சாகச செயல்கள், பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் மாணவர்களை தட்டிக் கேட்கும் ஓட்டுனர், நடத்துனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. எனவே, சென்னையில் இனி வரும் அனைத்து புதிய மாநகர பேருந்துகளிலும், கதவுகள் கட்டாயமாக பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசலின் போது பள்ளி, கல்லூரி மாணவர்கள், பயணியர் சிலரும் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி, ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். பேருந்துகளில் கதவுகளை பொருத்தும் போது, படிகளில் பயணம் செய்வதை தவிர்க்க முடியும். எனவே, சென்னையில் இனி வரும் அனைத்து புதிய மாநகர பேருந்துகளிலும், கதவுகள் கட்டாயமாக இருக்க வேண்டுமென முடிவெடுத்துள்ளோம். படிப்படியாக, அடுத்த சில ஆண்டுகளில், அனைத்து பேருந்துகளிலும் கதவுகள் வசதி இருக்கும். இதன் வாயிலாக படிக்கட்டு பயணம் தவிர்க்கப்படுவதோடு, விபத்துகளையும் குறைக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post மாநகர போக்குவரத்து கழகத்தின் புதிய பேருந்துகளில் கதவுகள் கட்டாயம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Metropolitan Transport Corporation ,Madhavaram ,Chennai Metropolitan Transport Corporation ,
× RELATED சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின்...