திருவனந்தபுரம்: கேரள போலீசின் முக்கிய விவரங்களை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினருக்கு கொடுத்ததாக கோட்டயம் சைபர் செல் சப்-இன்ஸ்பெக்டர் ரிஜுமோன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கேரள காவல்துறையில் பணிபுரியும் சிலர் தடை செய்யப்பட்ட சில தீவிரவாத குழுவினருடன் தொடர்பு வைத்திருப்பது ஒன்றிய உளவுத்துறைக்கு சமீபத்தில் தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது. இடுக்கி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்த 4 போலீசார் தீவிரவாத இயங்கங்களுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் சமீபத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
சென்னையில் சிலவாரங்களுக்கு முன் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த சிலரை என்ஐஏ கைது செய்தது. இவர்களில் திருச்சூரை சேர்ந்த நபீல் அகமது என்பவர் ஐஎஸ் அமைப்புக்கு கேரளாவில் நிதி திரட்டி வந்தது தெரியவந்தது. இதற்கிடையே நபீல் அகமதுவுடன் பாலக்காடு அருகே உள்ள மண்ணார்க்காடு பகுதியை சேர்ந்த சகீர் துர்க்கி என்பவர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து என்ஐஏ நேற்று அதிகாலை சகீரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தது.
இவர்களுக்கும் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் சைபர் செல் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ரிஜுமோன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் போலீசின் சில முக்கிய விவரங்களை உடனுக்குடன் ஐஎஸ் இயக்கத்தினருக்கு பரிமாறி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரிஜுமோனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து எர்ணாகுளம் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். விரைவில் அவர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
The post ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த கேரளா எஸ்ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.