×

காலீஸ்தான் தீவிரவாதி கொலையில் இந்தியா தொடர்பு குறித்த ஆதாரங்களை அனுப்பி விட்டோம்: கனடா பிரதமர் ஜஸ்டின் தகவல்

டொரண்டோ: ஹர்தீப் சிங் கொலையில் இந்தியாவின் தொடர்பு குறித்த ஆதாரங்களை ஏற்கனவே இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான காலீஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஹர்திப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் நிஜ்ஜார் கொலையில் இந்திய முகமைகளுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டியது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே கூறுகையில், ‘‘நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கான தொடர்பு குறித்த நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை பல வாரங்களாக இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டோம். இந்த சூழ்நிலையில் உண்மைகளை கண்டறிய கனடாவுடன் ஆக்கப்பூர்வமாக உறுதியளிக்கும் வகையில் இந்தியாவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் எங்களுடன் இணைந்து செயல்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார். இது தொடர்பாக அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர் பிளிங்கன் கூறுகையில்,‘‘நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடாவின் குற்றச்சாட்டுவது குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொள்கிறது. விசாரணை தொடர்பாக கனடாவுடன் இந்தியா பணியாற்றுவது முக்கியமாகும்” என்றார்.

சொத்துக்கள் பறிமுதல்: என்ஐஏ அதிரடி
தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பை சேர்ந்த குர்பத்வந்த் சிங் பன்னூன் வெளியிட்ட வீடியோவில், கனடாவில் இருக்கும் இந்தியர்களே வெளியேறுங்கள். இந்தியாவிற்கு திரும்பி செல்லுங்கள் என்று அச்சுறுத்தல் விடுத்து இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அமிர்தசரஸில் உள்ள குர்பத்வந்த் சிங்கின் பூர்வீக கிராமமான கான்கோட்டில் விவசாய நிலம், வீட்டை என்ஐஏ கையகப்படுத்தியுள்ளது. இனி இவை அரசுக்கு சொந்தமானதாகும்.

*இந்தியா கருத்து
கனடாவுக்கான முன்னாள் இந்திய தூதர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில்,‘‘கனடா சர்ச்சையை தவிர்க்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகள். சட்டத்தின் ஆட்சி அதன் போக்கில் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும். உண்மை பொதுவெளியில் வர அனுமதியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post காலீஸ்தான் தீவிரவாதி கொலையில் இந்தியா தொடர்பு குறித்த ஆதாரங்களை அனுப்பி விட்டோம்: கனடா பிரதமர் ஜஸ்டின் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Khalistan ,Justin Trudeau ,Toronto ,Justin ,Hardeep Singh ,
× RELATED கனடா பிரதமர் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: இந்தியா கண்டிப்பு