×

வாரணாசியில் ரூ.450 கோடியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அடிக்கல் நாட்டினார் மோடி: சச்சின், கவாஸ்கர், ரவி சாஸ்திரி பங்கேற்பு

வாரணாசி: உபியின் வாரணாசியில் ரூ.450 கோடி செலவில் கட்டப்படும் பிரமாண்ட சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க நேற்று சென்றார். அங்கு, ராஜாதலாபியில் ரூ.450 கோடி செலவில் கட்டப்பட உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் ரோஜர் பின்னி, துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா மற்றும் செயலாளர் ஜெய் ஷா, கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி மற்றும் திலீப் வெங்சர்கார் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர், பிரதமர் மோடிக்கு இந்திய அணியின் டீசர்ட் ஒன்றை நினைவுப்பரிசாக வழங்கினார். டீசர்ட் பின்புறத்தில் நரேந்திர மோடி என்பதன் சுருக்கமாக ‘நமோ’ என்றும், 1ம் எண்ணும் அச்சிடப்பட்டிருந்தது. அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர் மோடி, ‘‘கிரிக்கெட் விளையாட்டு உலகையே இந்தியாவுடன் இணைக்கிறது. இதுபோன்ற விளையாட்டு உள்கட்டமைப்புகளின் விரிவா்கம் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமாகும். புதிய கல்விக் கொள்கையில், விளையாட்டு என்பது பாடம் சாராத திறனாக இல்லாமல், முக்கிய பாடமாக கொண்டு வரப்படும்’’ என்றார். இந்த ஸ்டேடியத்திற்கான நிலத்தை வழங்க உபி ரூ.121 கோடி செலவிட்டுள்ளது. ஸ்டேடியம் கட்டுமான பணிக்காக பிசிசிஐ ரூ.330 கோடி செலவிடும். கட்டுமான பணிகள் முடிந்து 2025 டிசம்பரில் ஸ்டேடியம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*பெண்கள் மலர் தூவி வரவேற்பு
கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, பெண்கள் மட்டுமே பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். கூட்டத்திற்கு பிரதமர் மோடி வந்த போது, நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதற்காக அவருக்கு பெண்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மோடி பேசுகையில், ‘‘நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியதற்கான பெருமை தேசத்தின் பெண்களையே சேரும். இந்த விஷயத்தில் நீங்கள் விழிப்புடன் ஒன்றுபட்டு இருந்ததால், அனைத்து அரசியல் கட்சிகளும் பயந்து விட்டன. உங்களின் வலிமை தான் இந்த மசோதா நிறைவேற காரணம்’’ என்றார்.

*வாரணாசி கிரிக்கெட் மைதானத்தில் 30,000 ரசிகர்கள் வரை அமர முடியும்.

* சிவபெருமானை மையமாக வைத்து இந்த மைதானம் கட்டப்பட உள்ளது. இதன் மேற்கூரை சிவன் தலையில் உள்ள பிறை போன்ற வடிவத்திலும், உயர்கோபுர மின் விளக்குகள் திரிசூலம் வடிவிலும், மீடியாக்களுக்கான அரங்கம் உடுக்கை போலவும், கேலரிகள் கங்கை படித்துறை வடிவிலும் அமைக்கப்பட உள்ளன.

* உத்தரப்பிரதேசத்தில் கட்டப்படும் 3வது கிரிக்கெட் மைதானம் இது. ஏற்கனவே லக்னோ மற்றும் கான்பூரில் கிரிக்கெட் மைதானங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post வாரணாசியில் ரூ.450 கோடியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அடிக்கல் நாட்டினார் மோடி: சச்சின், கவாஸ்கர், ரவி சாஸ்திரி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Varanasi ,Sachin ,Gavaskar ,Ravi Shastri ,Varanasi, UP.… ,Dinakaran ,
× RELATED டீப் ஃபேக் வீடியோவால் அரசியல்...