×

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிராம மக்கள் புகார்களை தெரிவிக்க ஊராட்சி மணி அழைப்பு மைய சேவை: நாளை மறுநாள் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சேலம்: தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களின் புகார்களை தெரிவிக்க ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஊராட்சி மணி அழைப்பு மையம் ெதாடங்கப்படுகிறது. தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் கீழ் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் 12,524 கிராம ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. நாட்டின் முதுகெழும்பாக கருதப்படும் கிராமங்களில் உள்ள பொதுமக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது ஊரக வளர்ச்சி துறையின் இன்றியமையாத பணியாகும். குறிப்பாக, பொதுமக்கள் அன்றாட தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, பொது சுகாதாரம், நோய் தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு அந்த ஊராட்சி நிர்வாகங்களே பொறுப்பு வகிக்கின்றன.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை ெபாறுத்தவரை, குறைந்த பரப்பளவு கொண்ட பகுதிகள் என்பதால், பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாகவும் எளிதாகவும் தெரிவித்து, தீர்வு காண முடிகிறது. அதேசமயம், கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனையடுத்து ஒட்டுமொத்தமாக கிராமப்புற மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற மக்கள் தங்களது பகுதி சார்ந்த குறைகளை எளிதாக தெரிவிக்கும் ெபாருட்டு, ஊராட்சி மணி அழைப்பு மையம் என்ற ேசவை தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக அமைக்கப்படும் ‘‘ஊராட்சி மணி’’ அழைப்பு மையத்தை, வரும் 26ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த ‘‘ஊராட்சி மணி’’ அழைப்பு மையத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம். இதற்காக அழைப்பு மையத்திற்காக ‘155340’ என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் ‘‘ஊராட்சி மணி’’ அழைப்பு மையத்தின் தொடர்பு அலுவலராக, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (வளர்ச்சி) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த ‘‘ஊராட்சி மணி’’ அழைப்பு மையத்தின் செயல்பாடுகள் தொடர்பான அடிப்படை விவரங்களை தெரிவித்திட கூடுதல் இயக்குநர் (பொது) தலைமையில் காணொலி கூட்டம் நடத்தப்பட்டது. இதில்,“ஊராட்சி மணி’’ அழைப்பு மையம் தொடர்பான விவரங்கள் மற்றும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அலுவலர்களின் விவரம் மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டிய காலக்கெடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற மக்கள் தங்களது புகார்களை எளிதாக தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிராம மக்கள் புகார்களை தெரிவிக்க ஊராட்சி மணி அழைப்பு மைய சேவை: நாளை மறுநாள் முதல்வர் தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Rural Development Department ,Chief Minister ,CM Calls Center Service ,Salem ,Naval Mani Call Centre ,Tamil Nadu ,Naval Hour Call Center Service ,
× RELATED வலங்கைமான் அருகே மூங்கில்...