×

விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இன்றும் கரைக்கப்படுகிறது. இதற்காக 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னை, தாம்பரம், ஆவடியில் விநாயகர் சிலைகளை கரைக்கும் போது அசம்பாவிதங்களை தடுக்க 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கடந்த 18ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. போலீசார் அனுமதி அளித்த இடங்களில் 1,519 சிலைகள் பொதுமக்கள் முன்னிலையில் இந்து அமைப்புகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது.

சென்னை காவல் எல்லையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை 17 வழித்தடங்களிலும், தாம்பரம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை 4 வழித்தடங்கள், ஆவடி பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை 5 வழித்தடங்கள் என மொத்தம் 26 வழித்தடங்களில் மட்டும் ஊர்வலமாக கொண்டு வந்து சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னையில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இதில் 1,500 சிலைகள் பிரம்மாண்ட சிலைகள் ஆகும். இந்நிலையில், சென்னையில் இன்று 2 ஆயிரம் சிலைகள் கரைக்கப்பட இருக்கின்றன. நேற்று முன்தினம் 25 சிலைகளும், நேற்று 40 சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன.

சிலைகளை கரைக்க நேற்று பாரதிய சிவசேனா அமைப்பினரும், இன்று இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ள 4 இடங்களில் கடற்கரை நீர்நிலைகளில் கரைத்தனர். போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லும் 26 வழித்தடங்களிலும், சென்னை காவல்துறை சார்பில் 16,500 காவலர்கள், 2 ஆயிரம் ஊர்க்காவல்படையினர், தாம்பரம் காவல்துறை சார்பில் 1,500 காவலர்கள், ஆவடி காவல் துறை சார்பில் 2,080 காவலர்கள் என மொத்தம் 22,080 காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த ஆண்டு சென்னை காவல் எல்லையில் 1,519 சிலைகளும், தாம்பரம் காவல் எல்லையில் 425 சிலைகள், ஆவடி காவல் எல்லையில் 204 சிலைகள் உட்பட மொத்தம் 2,148 சிலைகளை பட்டினப்பாக்கம், பல்கலை நகர், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்றம் என 4 இடங்கள் மட்டுமே கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதிலும் இருந்து கொண்டு வரப்படும் சிலைகளை கன்வேயர் பெல்ட், கிரேன்கள், படகுகள் உதவி கொண்டு சிலைகளை கடலில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சந்தீப் ராய் ரத்தோர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சென்னையில் இன்று பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு உள்பட 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன. காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் சிலைகளை கொண்டுவர வேண்டும். சென்னை, ஆவடி, தாம்பரத்தில் பாதுகாப்புக்காக 22 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். கடற்கரை மணலில் விநாயகர் சிலைகளை கொண்டு வருவதற்காக வழிகள், மின் விளக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர். தமிழகத்தில் டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் தலைமையில் 1.2 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக திருவாரூர், முத்துப்பேட்டை, கோவை, நெல்லை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் கூடுதல் பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் இன்று நடைபெறுகிறது. நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் 622 சிலைகள் கரைக்கப்பட்டன. இன்று 5388 சிலைகள் கரைக்கப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி முதல் இன்று வரை 34 ஆயிரம் சிலைகள் கரைக்கப்படுகின்றன.

The post விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Ganesha ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...