×

வாட்ஸ்அப், டெலிகிராம், பேஸ்புக் மெசஞ்சர்களில் வரும் சலுகை அறிவிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய்குமார் அறிவுறுத்தல்

சென்னை: வாட்ஸ்அப் டெலிகிராம், பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவற்றில் வரும் சலுகை அறிவிப்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் காவல்துறை கூடுதல் இயக்குநர் சஞ்சய் குமார் அறிவுறுத்தியுள்ளார். மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் மூலம் பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொள்கிறார்கள். அவர்கள் தங்களை ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் ஹெச்ஆர் ஆக அறிமுகப்படுத்திக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறார்கள். இதில் பல்வேறு வணிகங்கள் மற்றும் இன்புளுயன்சர்களுக்கு கூகுள் மேப்பில் மதிப்புரைகள் வழங்குவது மற்றும் கருத்துகளை பதிடுவது போன்ற செயல்பாடுகள் இருக்கலாம்.

ஒரு நாளைக்கு ரூ.450 ரூபாய் முதல் ரூ.11,000 வரை, பணிகளை முடிப்பதன் மூலம் சம்பாதிக்கலாம் என்று கூறி மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை கவர்ந்திழுக்கிறார்கள். இந்த மோசடி தொடர்பாக கடந்த 6 மாதங்களில் மொத்தம் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சைபர் க்ரைம் கூடுதல் காவல்துறை இயக்குநர் சஞ்சய் குமார் கூறியதாவது: வாட்ஸ்அப் டெலிகிராம். பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவற்றில் பெறும் சலுகைகள் குறித்து எச்சரிக்கையாகஇருக்க வேண்டும், வேலைவாய்ப்பின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த நிறுவனத்தை நேரடியாக அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ள வேண்டும். முறையான வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பதாரர்கள் முன்கூட்டிய கட்டணம் அல்லது டெபாசிட்களை செலுத்த வேண்டிய அவசியமில்லை.

பயிற்சி அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக நீங்கள் பணம் செலுத்துமாறு கேட்டால், அது ஒரு மோசடியாக இருக்கலாம். அதனால் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முதலீட்டு வாய்ப்புகளுடன் அணுகினால், வர்த்தக தளத்தை ஆராயுங்கள், இது ஒரு முறையான மற்றும் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஒரு முறைக்கு பலமுறை யோசித்து ஆராய வேண்டும். நீங்கள் இதுபோன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக சைபர் க்ரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தை புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யலாம். இணையதளத்தை மிக கவனமாக கையாள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

The post வாட்ஸ்அப், டெலிகிராம், பேஸ்புக் மெசஞ்சர்களில் வரும் சலுகை அறிவிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய்குமார் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,Cybercrime ,ADGP ,Sanjay Kumar ,Chennai ,Dinakaran ,
× RELATED தேனியில் யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது: கோவை மாநகர சைபர் கிரைம் நடவடிக்கை