×

ரயில்வே ஸ்டேசன் தொடர் புறக்கணிப்பு ஒன்றிய அரசை கண்டித்து ரயில் மறியல், கடையடைப்பு: சிவகங்கையில் பரபரப்பு

சிவகங்கை: சிவகங்கை ரயில்வே ஸ்டேசனை தொடர்ந்து புறக்கணித்து வரும் ரயில்வே நிர்வாகம், ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து கட்சியினர், வர்த்தக சங்க அமைப்பினர் சார்பில் ரயில் மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. சிவகங்கை வழியே சென்று வந்த மன்னார்குடி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி முதல் எர்ணாகுளம் வரை செல்லும் ரயில், செங்கோட்டை முதல் தாம்பரம் வரை செல்லும் ரயில் உள்ளிட்ட இவ்வழியே செல்லும் ரயில்கள், சிவகங்கை ரயில்வே ஸ்டேசனில் நிற்பதில்லை.

பல்லவன் ரயில் காரைக்குடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. பகல் நேரங்களில் சிவகங்கையில் இருந்து சென்னைக்கு ரயில் இல்லை. மாவட்ட தலைநகரான சிவகங்கை, ரயில்வே திட்டங்களில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் நிலையில் ரயில்வே நிர்வாகம் மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து நேற்று அனைத்து கட்சியினர், வர்த்தக அமைப்பினர் சார்பில், சிவகங்கையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. காலை 9.20 மணிக்கு திருச்சியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் ரயிலை மறிக்கும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

அவர்களை போலீசார், ஸ்டேஷனுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் 50 பேர் மட்டுமே உள்ளே சென்றனர். இதற்கிடையே 2 கி.மீ தூரத்திலேயே சிலர் ரயிலை 5 நிமிடம் நிறுத்தி போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கலைந்து போக செய்தனர். பின்னர் ஸ்டேஷனுக்கு வந்த ரயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் ரயில் சுமார் 15 நிமிடம் நின்றது. போராட்டம் நடத்திய அனைவரையும் போலீசார் கைது சென்றனர். இதையொட்டி நகரம் முழுவதும் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஆட்டோ, வேன் உள்ளிட்ட தனியார் வாகனங்களும் ஓடவில்லை.

The post ரயில்வே ஸ்டேசன் தொடர் புறக்கணிப்பு ஒன்றிய அரசை கண்டித்து ரயில் மறியல், கடையடைப்பு: சிவகங்கையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Sivaganga Sivagangai ,Railway Administration ,Sivaganga Railway Station ,Railway Station ,Sivaganga ,
× RELATED ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை...