×

பந்தலூர் அருகே தேயிலை தோட்ட பகுதியில் சாலையில் 200 அடிக்கு திடீர் பள்ளம்: குடியிருப்புகளை காலி செய்யும் கிராமவாசிகள்

பந்தலூர்: பந்தலூர் அருகே அத்திக்குன்னா தேயிலை தோட்ட பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன் திடீரென 20 அடி பள்ளம் உருவானது. பூமி உள்வாங்கியதால் புதை குழி மாதிரியாக காட்சி அளித்த இந்த பள்ளம் தற்போது 200 அடியாக ஆழம் அதிகரிக்க துவங்கியதால் கிராம மக்கள் பீதி அடைந்து குடியிருப்புகளை காலி செய்யத் துவங்கி உள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அத்திக்குன்னா தனியார் தேயிலை தோட்டத்தின் மட்டத்துப்பாடி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பை ஒட்டிய பகுதியில் கடந்த 15ம் தேதி சுமார் 8 அடி அகலம், 20 அடி ஆழத்திற்கு பூமியில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.

இதனால், தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். அப்பகுதியை சுற்றி தோட்ட நிர்வாகம் வேலி அமைத்து, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்தனர். புவியியல் மற்றும் சுரங்கத்துறை, வருவாய்துறை, வேளாண்மை பொறியியல் துறை உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மேலும் பூமி உள்வாங்கியது. சுமார் 200 அடி ஆழத்திற்கு மண் இறங்கி கிடு, கிடு பள்ளம் போல காட்சி அளிக்க துவங்கியது. பள்ளத்தினுள் கற்களை போட்டால் குளத்தில் கல் எறிவது போல் சத்தம் எழுகின்றது.

தோட்ட நிர்வாகம் அப்பகுதியில் வசித்து வந்த 12 குடியிருப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்களை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து, குடியிருப்புகளை காலி செய்து பொருட்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு காலியாக உள்ள தேயிலை தோட்ட குடியிருப்புகளுக்கு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில்,“ மூன்று தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். தற்போதுதான் இந்த பகுதியில் பூமியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

The post பந்தலூர் அருகே தேயிலை தோட்ட பகுதியில் சாலையில் 200 அடிக்கு திடீர் பள்ளம்: குடியிருப்புகளை காலி செய்யும் கிராமவாசிகள் appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Atikunna tea plantation ,Dinakaran ,
× RELATED பந்தலூர் அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்