×
Saravana Stores

அறநிலையத்துறையின் தொன்மையான 237 கோயில்களில் திருப்பணிக்கு மாநில வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான 237 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்க மாதம் இருமுறை மாநில அளவிலான வல்லுநர் கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி, மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டம் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் திருவாரூர் மாவட்டம் கைலாசநாதர் கோயில், விழுப்புரம் மாவட்டம், கோணம்மன் கோயில், செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், தஞ்சாவூர் மாவட்டம் அய்யனார் கோயில், ஒரத்தநாடு சுந்தரவிநாயகர் கோயில், புதுக்கோட்டை மாவட்டம் ஈஸ்வரன் கோயில், சிவகங்கை மாவட்டம் சோழைகாத்த அய்யனார் கோயில், காளையார்கோவில் காளியம்மன் கோயில், ராமநாதபுரம் மாவட்டம் சித்தி விநாயகர் கோயில், திருவாடானை மகாலிங்கசாமி கோயில் உள்ளிட்ட 237 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

மாநில அளவிலான வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும். இந்த கூட்டத்தில் ஆகம வல்லுநர்கள், தொல்லியல் துறை வடிவமைப்பாளர், கட்டமைப்பு வல்லுநர் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post அறநிலையத்துறையின் தொன்மையான 237 கோயில்களில் திருப்பணிக்கு மாநில வல்லுநர் குழு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : State expert committee ,charity department ,CHENNAI ,department ,expert ,of charity department ,
× RELATED கோயிலில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட...