இம்பால்: இன்று முதல் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் இணைய சேவை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பைரன் சிங் தெரிவித்தார். மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் மற்றும் குகி இன மக்களுக்கிடையே கடந்த மே மாதம் 3ம் தேதி கலவரம் வெடித்தது. இதையடுத்து அங்கு இணையசேவை வசதி நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ஜூலை மாதம் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டது. அப்போது கலவரத்தில் குகி இன பெண்களை சிலர் நிர்வாணமாக அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து மீண்டும் இணைய சேவைக்கு அம்மாநில அரசு தடை விதித்தது. வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்காக அம்மாநில முதல்வர் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என்றும், இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் பைரன் சிங் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘இன்று முதல் மாநிலத்தில் மீண்டும் இணைய சேவை வழங்கப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.
The post மணிப்பூரில் மீண்டும் இணைய சேவை: முதல்வர் பைரன் சிங் அறிவிப்பு appeared first on Dinakaran.