×

தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு: திருவள்ளூர் பெரியகுப்பம் பேருந்து நிலையத்தில் மதுபிரியர்கள் தொல்லை


திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுப்பம் பகுதியில் நகராட்சி பேருந்து நிலையம் உள்ளது. இங்கு 20 க்கும் மேற்பட்ட கடைகள், பயணியர் அமர நிழற்குடை உள்ளது. தினமும் திருவள்ளூர் தேரடியில் இருந்து ரயிலடிக்கு, அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையத்தில் இருந்துவரும் பயணிகள், பேருந்துகள் மூலம் திருவள்ளூர் நகரில் உள்ள ஆயில்மில் பஸ் நிறுத்தம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பஸ் நிறுத்தம், தலைமை அஞ்சல் அலுவலக பஸ் நிறுத்தம், அரசு போக்குவரத்து கழக பேருந்து பணிமனை பஸ் நிறுத்தம், வட்டாட்சியர் அலுவலக பஸ் நிறுத்தம், திருவிக. பேருந்து நிலையம் மற்றும் தேரடி ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய்கின்றனர்.

இவ்வாறு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் பெரியகுப்பம் பேருந்து நிலையம் முறையாக பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. பகல், இரவு நேரத்தில் தனியார் வாகனங்கள் அனைத்தும் பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்படுகிறது. பேருந்து நிலையத்திற்குள் தனியார் தூய்மை பணியாளர்கள் தங்குவதற்கு ‘ஷெட்’ அமைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பேருந்து நிழற்குடையில் ஓய்வெடுத்தும் இரவில் மதுபானம் அருந்தும் பாராக பயன்படுத்துகின்றனர். இதன்காரணமாக பெண்கள் யாரும் பேருந்து நிலையத்துக்கு வர அச்சப்படுகின்றனர். திருவள்ளூர் நகரத்தில் உள்ள திருவிக. பேருந்து நிலையம் 50 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டதால் சிறிய பேருந்து நிலையமாக உள்ளது.

தற்போது திருவள்ளூர் வளர்ந்துள்ளதால் திருவிக.பேருந்து நிலையம் போதுமானதாக இல்லாததால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் வசதிகளுக்காக 5 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன வசதிகளுடன் வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் திருவள்ளூரில் உள்ள திருவிக. பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

இதனால் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள் பெரியகுப்பம் பேருந்து நிலையத்தில் இருந்து மணவாளநகர் வழியாக பெரும்புதுார், பூந்தமல்லிக்கு செல்லும் பஸ்களை இயக்கவேண்டும். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.‘’பெரியகுப்பம் பேருந்து நிலையத்தை சீரமைத்து பூந்தமல்லி,  பெரும்புதூர் வழித் தடங்களில் புதியதாக பேருந்துகளை இயக்க வேண்டும்’’ என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு: திருவள்ளூர் பெரியகுப்பம் பேருந்து நிலையத்தில் மதுபிரியர்கள் தொல்லை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur Periyakuppam bus station ,Thiruvallur ,Periyakuppam ,Thiruvallur Bus Station ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே...