×

இந்திய மொழிகளில் சட்டங்களை உருவாக்க முயற்சி: பிரதமர் மோடி பேச்சு


புதுடெல்லி: இந்திய மொழிகளில் சட்டங்களை உருவாக்க ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாக பிரதமர் மோடி கூறினார். டெல்லியில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு இன்று காலை தொடங்கியது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரதமர் மோடி, மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘இந்தியாவில் 2 வகையில் சட்டங்களை உருவாக்க ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது. ஒன்று, நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு பழக்கப்பட்ட மொழியில் சட்டங்களை உருவாக்க வேண்டும். மற்றொன்று சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் அவர்களுக்கு நன்கு தெரிந்த மொழியில் சட்டங்கள் இருக்க வேண்டும்.

பொதுமக்கள் அவர்களது சொந்த சொத்தாக இந்திய சட்டங்களை கருத வேண்டும். அதற்கு நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும். சட்டத்துறையும், வழக்கறிஞர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் நாட்டில் நீதியை நிலை நாட்ட முடியும். வரும் 2047ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க வேண்டும். அதற்கு நீதித்துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். மகாத்மா காந்தி, பி.ஆர்.அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் வல்லபாய் படேல் போன்ற பெரும் தலைவர்கள் அனைவரும் வழக்கறிஞர்களாக இருந்து சாதித்தார்கள்’ என்றார்.

The post இந்திய மொழிகளில் சட்டங்களை உருவாக்க முயற்சி: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,New Delhi ,Union Government ,Delhi ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?