திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள மலைக்கோயிலின் உச்சியில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் முறையாக எரிவதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அறநிலையத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் பட்சி தீர்த்தம், வேதமலை என்று அழைக்கப்படும் திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் ஆலயம் மிகவும் பழமையான மற்றும் உலகின் முக்கிய சிவதலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இதுமட்டுமின்றி சைவ குறவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய 4 நாயன்மார்களும் ஒருங்கே பாடப்பெற்ற ஒரே தலம்.
இத்தகைய சிறப்புமிக்க வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் கோபுரத்தை சுற்றிலும், அதன் உச்சியிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தினமும் இரவு நேரங்களில் வண்ண மின்விளக்குகள் மிளிரும். இதனால் அவ்வழியே இரவு நேரங்களில் செல்பவர்கள் மற்றும் வெளியூர் பக்தர்களுக்கு இந்த மின்விளக்குகள் வழிகாட்டியாகவும் திருக்கழுக்குன்றத்தின் அடையாளமாகவும் விளங்கி வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் கோபுரத்திலும் அதன் உச்சியிலும் இரவு நேரங்களில் வண்ண மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் மலைப்பாதையில் வழிப்பறி, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனால் இரவு நேரங்களில் மலைக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்கு உள்ளூர் மக்களும் வெளியூர் பக்தர்களும் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் உச்சியில் மின் விளக்குகள் எரியாததால் பக்தர்கள் அவதி appeared first on Dinakaran.