×

சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாக தொடங்கிய 19 வது ஆசிய விளையாட்டுப்போட்டி: அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார்

பெய்ஜிங்: சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. ஆசிய நாடுகளுக்கிடையே 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த தொடர், சீனாவில் கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டு நடக்கிறது. தொடக்க விழாவில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். ஹாங்சோவில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்கிய போட்டி அக்.8ம் தேதி நிறைவடைகிறது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், மலேசியா என 45 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.

மொத்தம் 40 வகையான விளையாட்டுகளில், 61 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகள் ஹாங்சோ நகரில் 56 இடங்களில் நடத்தப்படும். போட்டியில் சுமார் 12 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களை தவிர ஆயிரக்கணக்கான பயிற்சியாளர்கள், அலுவலர்கள், உதவியாளர்களும் சீனா சென்றுள்ளனர். போட்டித் தொடர் அதிகாரப்பூர்வமாக இன்று தான் தொடங்குகிறது என்றாலும்… கால்பந்து, மகளிர் கிரிக்கெட், வாலிபால், படகு போட்டி உள்பட பல்வேறு குழு போட்டிகள் ஏற்கனவே செப்.19 முதல் நடைபெற்று வருகின்றன.

இந்தியா சார்பில் இதுவரை இல்லாத அளவுக்கு 655 வீரர், வீராங்கனைகள் அடங்கிய பிரமாண்ட அணி பதக்க வேட்டையில் களமிறங்குகிறது. கடந்த 18 போட்டிகளில் இந்தியா 2018ல் ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில்தான் அதிகபட்சமாக 70 பதக்கங்களை வென்றுள்ளது. அந்த சாதனையை இந்தியா இம்முறை முறியடித்து, பதக்க வேட்டையில் முதல் முறையாக சதம் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The post சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாக தொடங்கிய 19 வது ஆசிய விளையாட்டுப்போட்டி: அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chancellor ,Xi Jinping ,Hangzhou, China ,Beijing ,19th Asian Sports Competition ,19th Asian Games ,President ,
× RELATED சொல்லிட்டாங்க…