×

நான் ஆளுநரோ இல்லையோ… இதுதான் வாழ்நாள் சேவை: தமிழ் மொழி குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

சென்னை: நான் ஆளுநரோ இல்லையோ, தமிழ் மொழியை கற்றுக்கொண்டு, நாட்டின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வதே வாழ்நாள் சேவையாக செய்ய உள்ளேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ராஜ்பவனில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த தமிழ் ஆளுமைகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர்; எந்த இந்திய மொழியும் தமிழ் மொழிக்கு இணையாக இல்லை. தமிழ் மொழிக்கு ஓரளவு இணையாக உள்ள மொழி சமஸ்கிருதம். தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன் தமிழ் மொழியின் தொன்மை, இலக்கியங்கள் குறித்து தெரியாது.

திருக்குறளை ஆங்கிலத்தில் நான் படிக்கத் தொடங்கியபின், அதனுடன் தீவிரக் காதல் வயப்பட்டேன். நான் 5ஆவது படிக்கும்போது என் அப்பா பகவத் கீதையை கொடுத்து படிக்கச் சொன்னார். அப்போதில் இருந்து பகவத் கீதை தான் எனக்கு உற்ற தோழனாக இருந்தது. ஆனால், இப்போது திருக்குறளோடு சேர்த்து இரண்டு புத்தகங்கள் என உற்ற தோழனாக உள்ளன. திருக்குறள் மொழிபெயர்ப்பை படிக்கும் போது தமிழ் மொழியின் மீது ஆழமான அன்பு ஏற்பட்டது. தமிழ் மொழி கற்பதில் தொடக்க நிலையில் உள்ளேன். மொழி என்பது ஆன்மா. மக்களின் கலாசாரத்தை, தொன்மையை மொழியே வெளிப்படுத்தும். மற்ற மொழியினரும் தமிழ் மொழியை படிக்கின்றனர்.

தமிழ் புத்தகங்களை மொழிப்பெயர்ப்பு செய்து மற்ற மொழியினருக்கு கொண்டு செல்வது அரும்பணி, தமிழ் மொழி, இலக்கியங்களை பாதுகாக்க வேண்டும். அறம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஒரு சொல் எந்த ஒரு ஐரோப்பிய மொழியிலும் இல்லை. கடவுளை வழிபடுவது மட்டும் ஆன்மிகம் அல்ல; உயிரினம் கஷ்டப்படுவதைப் பார்த்து கவலைகொள்வதும் ஆன்மிகம்தான். மொழிதான் மக்களின் ஆன்மாவாக உள்ளது; மக்களின் கலாசாரம், பண்பாட்டை விளக்குகிறது. நான் ஆளுநரோ இல்லையோ, தமிழ் மொழியை கற்றுக்கொண்டு, நாட்டின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வதே வாழ்நாள் சேவையாக செய்ய உள்ளேன் இவ்வாறு கூறினார்.

The post நான் ஆளுநரோ இல்லையோ… இதுதான் வாழ்நாள் சேவை: தமிழ் மொழி குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு! appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravi ,Chennai ,
× RELATED உலகில் உள்ள அனைவரும் ஒன்றுதான் என்பதை...