×

இரு நீள் விசும்பு

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அபிராமி அந்தாதி – சக்தி தத்துவம்

இது ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே தலைவியாம் அபிராமி என்பதை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறார். அவள் மட்டுமே மோட்சத்தை தரமுடியும் என்பதையும், வேறு யாரும் தர முடியாது என்பதையும் உறுதி செய்கிறது. “யார்குறை காண்’’ என்கின்ற இந்த பதம், மேலும் உலகியலில் நன்கு வாழ பிரம்மா விதியை மாற்றி அருளலாம். ஆன்ம ஞானத்தை நன்கு அடைய இறைவன் விஷ்ணுவானவர் உதவலாம். நரகத்திலிருந்து நம்மை மீட்க எமன் நமக்கு விதிவிலக்கு அளிக்கலாம். சொர்க்கத்தை நமக்கு அருள இந்திரனால் முடியும். அதுபோல், ஞானத்தை சரஸ்வதியை கொண்டும், செல்வத்தை இலக்குமியை கொண்டும், கர்ம நாசத்தை துர்க்கையைகொண்டும் அடையலாம்.

வேள்வியினால் பல நன்மைகளையும் அடையலாம் என்றாலும், உமையம்மை ஒருத்தியே இவ்வனைத்தையும் அருள வல்லவள். மற்ற எந்த தேவர்களாலும் வழங்க முடியாத மோட்சம், அதற்கான முழு ஆற்றல் உமையம்மையிடத்திலே சிறப்பாக உள்ளது என்பதை அந்தாதி படிப்போர்க்கு உணர்த்துகிறார். மற்ற தேவர்களை சூட்டிக்காட்டி உமையம்மையை உயர்த்தி தனக்கு முக்தி அளிக்காததை அபிராமியை நோக்கி நேரடியாக குறையாக சொல்வதையே “யார்குறை காண்’’ என்றார்.

“இரு நீள்விசும்பின்’’என்பது பொதுவில் ஆகாயத்தைக் குறித்தது. “விசும்பு’’ என்ற சொல்லை பயன்படுத்தி மட்டுமே ஆகாயம் என்பதை குறிப்பிட்டு இருக்கலாம். “இரு நீள் விசும்பு’’ என்பதால் நீண்டு கொண்டே போகும். எல்லையற்றதாக இருக்கும் ஆகாயத்தின் பண்பையே குறிப்பிடுகிறார். இருத்தளுக்கு இடம் தரும் பண்பையே ஆகாசம் என்கிறார். அனைத்து உலகங்களும் சூரியன், சந்திரன், முதலான ஒன்பது கோள்களும், மேலும் பலகோடி நட்சத்திர மண்டலங்களுக்கும் இருக்கும் இடமாக ஆகாசமே உள்ளது.

அதனால் “இரு நீள் விசும்பும்” என்கிறார். மேலும், இருள் என்ற வார்த்தை கடை குறையாய் இரு என்று குறைந்து நட்சத்திரம், சூரியன், சந்திரன், வெண்மேகம் போன்றவை இல்லாத நீண்டு கொண்டே செல்கின்ற வெற்றிடத்தையே அதாவது ஒளியும், ஒளி மண்டலங்களும் அற்ற இருட்டான வெளியையே இரவு போல் தோன்றும் ஆகாயத்தையே “இரு நீள் விசும்பும்” என்றார்.

இதை வேதமானது எப்பொழுதும் எங்கும் இருளே இருக்கிறது. அதுவே, அனைத்திற்கும் காரணமாகவும் இருக்கிறது. அதனிடத்திலிருந்தே அனைத்தும் தோன்றின என்கிற பொருளில், “ராத்ரி சூக்தம்’’ குறிப்பிடுகிறது. உமையம்மைக்கு ஒன்பது இரவுகளே மிகச் சிறந்த வழிபாட்டு நேரமாக கருதப்படுகிறது. இதையே ‘என் மனத்து வஞ்சத்து இருள்’ (36) என்று அஞ்ஞானத்தை அபிராமி பட்டர் குறிப்பிட்டு, `அஞ்ஞானம் சுபாவம்’ என்கிறார். மேலும், மனிதனின் உயிர் இருந்த உடலை ஏற்கும் கற்பனையையும் “இரு நீள் விசும்பு’’ என்கிறார்.

இருத்தலுக்கு காரணமான நீண்டு வளர்கின்ற உடலை உற்பத்தி செய்யும் வெற்றிடம். ஆகையால், “இரு நீள் விசும்பு’’ என்கிறார். இதையே ‘பூத்தவளே’ (13) என்ற சொல்லால் அறியலாம். மேலும், ஆன்மாவோடு இரண்டறக் கலந்திருக்கும் அறியாமையை செய்யும் ஆணவ மலத்தையே குறிப்பிடுகின்றார். “விசும்பு” என்பதற்கு ஆணவம், கர்வம், செருக்கு என்பது பொருள்.

“நீள்” என்பதற்கு நீண்டு கொண்டே செல்வது என்பது பொருள். “இரு” என்பதற்கு இருத்தல் இயல்பு என்பது பொருள்.

ஆன்மாவின் ஆணவ மலத்தை நீக்கி அருள் செய்யும் பண்பையே “இரு நீள் விசும்பு’’ என்றும் ஆணவமலம், அடர்ந்த இருட்டு, கருப்பையில் தோன்றும் இருட்டு, வெளியில் உள்ள வெட்டவெளி இவையெல்லாவற்றையும் ஒரே வார்த்தையால் “இரு நீள் விசும்பு’’ என்கிறார். “மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை’’“மின்” என்பதனால் ஒளியையும் குறை என்பதனால் ஒளி தோன்றும் காலக் குறைபாட்டையும் காட்டி என்பதனால் அறிவித்தலையும் குறிப்பிடுகின்றார்.

“மின்குறை காட்டி’’ என்பதனால் குறைந்த அளவாக குறைந்த நேரமே அதாவது மாத்திரை பொழுதே தோன்றி மறையும் மின்னலை அது இருப்பதை அடர்ந்த இருட்டில் நாம் உணர்ந்து கொள்ள முடியும். இருட்டில் நொடிப் பொழுதில் தோன்றி மறையும் மின்னலானது, பார்ப்போருக்கு கணப் பொழுது தோன்றினாலும், மின்னலை நாம் நன்கு பார்க்க முடியும். மின்னலுக்கான அனைத்து ஆதாரங்களும் இருந்தாலும், இரவு நேரம் மின்னல் இருப்பதை அது மின்னலாலின்றி அறிந்து கொள்ள முடியாது.

அதுபோலவே, உமையம்மையானவள் அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்கும் பக்தர்களுக்கு அவளே மின்னல் போல் தோன்றி அருளினாலே அன்றி, உமையம்மையின் இருப்பை ஆன்மாக்கள் இருளிலே அறிந்து கொள்ள முடியாது. “காட்டி’’ என்ற வார்த்தையை ஒரு உதாரணத்தினால் அறிந்து கொள்வோம். திரை அரங்குகளில் திரைப்படங்களை காட்டுவார்கள். அதை ரசிப்பவர்கள் அக்காட்சியைப் பார்ப்பார்கள். அதுபோல, இங்கு உமையம்மையானவள் தன் இருப்பை ஒளியாக காட்டுகிறாள். தன் இருப்பை அறிவிக்கிறாள். ஆன்மாக்கள் பார்ப்பதற்காகவே காட்டி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். “மின்குறை காட்டி’’ என்பதனால் அறியாமையில் பார்க்க முடியாதிருக்கும் ஆன்மாக்களுக்கு தன் இருப்பை அறிவித்து அருள் செய்வதையே “மின்குறை காட்டி’’ என்று பெயர்.

“மெலிகின்ற நேரிடை’’ என்பதனால் உமையம்மையின் இடை என்ற உறுப்பு அமைவை மட்டும் கூறாமல், உடலில் உள்ள சுஷும்னா நாடி என்ற நாடியையும் குறிப்பிடுகின்றார். இந்த நாடியின் நடுவிலேதான் உமையம்மையானவள் சிறு ஒளியாக காட்சியளிப்பாள் என்கிறது யோக சாத்திரம். அந்த யோக சாஸ்திரப் பயிற்சியின் மூலம் உமையம்மையை வணங்குவோர், கண்களை மூடி தியானிக்கும் போது, ஒரு மின் ஒளி தோன்றி மறையும்.

அந்த மின்னலே சாதகன் உடலுக்கு உள் இருக்கும் ஆன்மாவை காட்டும் விளக்கொளியாகும். இந்த மின்னள் ஒளி, எந்த அளவிற்கு நிற்கிறதோ அந்த அளவிற்கு சாதகனானவன் ஆன்மாவை பற்றிய ஞான அனுபவத்தை பெறுவான். சில பேருக்கு இது ஒலியாகவும் வரும். இந்த யோகானுபவ காட்சியையே “மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை’’ என்கின்றார்.

“மெல்லியலாய்’’என்ற சொல்லானது மென்மையான இயல்புகளை உடைய கருணை கூர்ந்த உள்ளத்தைக் கொண்ட அளவற்ற அன்பை கொண்ட என்ற பொருளில் அபிராமிபட்டர் ‘மெல்லடியார்’ (56) என்று பெண்களையும், மெல்லியலாய் என்ற வார்த்தையால் உமையம்மையையும் குறிப்பிடுகிறார். சிற்ப சாத்திரங்கள் ஐந்து மென்மையான, ஒல்லியான, உயரமான, பெண் தெய்வங்களை வடிக்க வேண்டும் என்கிறார்.

அந்த வகையில், சிவகாமி சோமாஸ்கந்தரின் அருகில் இருக்கும் பஞ்சமூர்த்திகளில் ஒன்றான இருக்கைகளைக் கொண்ட அந்தந்த ஊரின் உமையம்மையின் பெயரை ஏற்று நின்ற திருக்கோல உமையம்மை. மேலும், காலை, வேளை பள்ளியறையில் வணங்கப் படும் `சித்சத்தி’ என்ற உமையம்மை சிவபெருமானின் அருகிலிருக்கும் `போகசக்தி’ என்ற உமையம்மை அஸ்திரதேவரில் உள்ள உமையம்மையையும் சூட்டவே “மெல்லியலாய்’’ என்கிறார்.

‘சிவகாம சுந்தரி சீரடிக்கே’ (68) ‘அபிராம வல்லி அடியினையை’(74) ‘ஆனந்தமாய் என் அறிவாய்’ (11) ‘அந்தரி’ (9) என்ற வார்த்தைகளால் இதை நன்கு அறியலாம். இந்த ஐந்து தேவதைகளும் படைத்தல், காத்தல், மறைத்தல் அருளள் என்ற ஐந்தொழிலையும் செய்பவர்கள்.

அச்சக்திகள்தான் வாழ்வை வளப்படுத்தும். அதுவே, இங்கே ஆன்மாவை அறிமுகம் செய்யும், சிவன் அருளை அனுபவமாக்கும் என்கிறது சைவம். இந்த எல்லாக் கருத்தையும் அடிப்படையாகக் கொண்டே, ஐந்து சக்திகளின் ஆற்றலையும் ஒருங்கே பெற்ற உமையம்மையை, அதாவது மனோன்மணியை மெல்லியலாய் என்பதனால் ஐந்து தேவதைகளை தனித் தனியாகவும், ஒன்றினையும் போது அபிராமியாகவும், இணைந்தும் பிரிந்தும் ஒரே வார்த்தையால் “மெல்லியலாய்” என்கிறார்.

“தன்குறை தீர, எம்கோன்”இந்த இடத்தில் ஒரு சித்தாந்த கலைச் சொல்லை அபிராமி பட்டர் பயன்படுத்துகிறார். மனிதர்கள் வாழ்வதற்கு அருள் செய்யும் போது ஈசானசிவம், தத்புருஷசிவம், அகோரசிவம், வாமதேவசிவம், சத்யோஜாதம் என்று பிரியும். ஒவ்வொருவரும் ஒரு சிவத்தையே பூசிக்க இயலும். இதுதீட்சை எடுத்துக் கொண்டு வீட்டில் வைத்து பூசிக்கும் லிங்க வடிவாகும். அதே சமயத்தில், பூசனை செய்பவர், ஆன்ம வடிவமாக மாறிவிட்டால், அதே லிங்கத்தை ஈசானருத்ரன், தத்புருஷருத்ரர் அக்கோரருத்ரர், வாமதேவருத்ரர், சத்யோஜாதருத்ரர் என்று வழங்குவார். வாழும்போது உடலோடு கூடியிருக்கும் போது உமையோடு இணைத்தே வணங்குவர், சிவம் என்ற பெயரையே சூட்டுவர். ஆன்மாவான பிறகு கங்கையோடு இணைந்து, `ருத்ரன்’ என்றே குறிப்பிடுவார்.

இந்த சித்தாந்த சொல்லின் உண்மையறிந்து, உமையம்மையை இடப்பாகம் வைத்து வாழ்வு வளம் பெற சிவம் என்ற பெயர் சூட்டி தியானிப்பர். வீட்டின் உள்ளே வைத்து வணங்குவார். ஆன்ம நலம் பெற கங்கையை தலையில் வைத்து ருத்ரன் என்ற பெயரைச் சொல்லி வாசலில் வைத்து வணங்குவர். இந்த பாடலைப் பொறுத்தவரை வாழும் போதே மோட்சத்திற்கான பிரார்த்தனையை அபிராமிபட்டர் செய்கிறார். `உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு மறக்கும் பொழுதென்முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே’ (89) என்பதனால் அறியலாம். ‘கண்ணியும்‌ செய்ய கணவரும்‌ கூடி, நம்‌ காரணத்தால்‌நண்ணி இங்கே வந்து தம்‌ அடியார்கள்‌ நடு இருக்கப்‌பண்ணி, நம்‌ சென்னியின்மேல்‌ பத்மபாதம்‌ பதித்திடவே’ (41) என்று சிவனையும் குறிப்பிடுவதால் அறியலாம். முக்தி நலம் தரும் ருத்ரனையே “தன்குறை தீர, எம்கோன்” என்கிறார்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post இரு நீள் விசும்பு appeared first on Dinakaran.

Tags : Abhirami Anthadi ,Shakti Tattva ,Talaviyam ,Abhirami ,Iru Neel Vishumbu ,
× RELATED அபிராமி அந்தாதி: அறிந்தேன் எவரும் அறியா மறையை!