×

ஜி20 மாநாடு வெற்றிக்கு பாராட்டு விழா; மோடி பேசியபோது கீழே விழுந்த பணியாளர்: டெல்லியில் நேற்றிரவு பரபரப்பு


புதுடெல்லி: ஜி20 மாநாடு வெற்றிக்கான பாராட்டு விழாவின் போது பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த போது பணியாளர் ஒருவர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் ஜி20 மாநாடு நடந்த ‘பாரத’ மண்டபத்தில், அந்த மாநாடு வெற்றியடைய பாடுபட்ட அனைத்து தரப்பினருக்கான பாராட்டு விழா நேற்றிரவு நடைபெற்றது. துப்புரவு பணியாளர்கள், ஓட்டுநர்கள், பல்வேறு அமைச்சகங்களின் ஊழியர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட 3,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அவர்கள் முன் பேசுகையில், ‘ஜி-20 மாநாடு வெற்றிக்கு பாடுபட்ட உங்களை வணங்குகிறேன். மாநாட்டின் வெற்றியானது உங்களுக்கான வெற்றியாகும்.

நான் பெரிய தொழிலாளியாக உள்ளேன்; நீங்கள் சிறிய தொழிலாளியாக உள்ளீர்கள். ஆனால் நாம் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். இந்த மாநாடு வெற்றியடைவதற்கு அதிகாரிகளின் பங்களிப்பையும் பாராட்டுகிறேன். எதிர்கால நிகழ்வுகளுக்கான வழிகாட்டியாக ஜி20 மாநாட்டு நிகழ்ச்சி இருக்கும். நிகழ்ச்சி அமைப்பாளர்களின் அனுபவங்களை ஆவணப்படுத்தும் வகையில், தனியாக இணையதளம் ஒன்றை உருவாக்க பரிந்துரைக்கிறேன். அவரவர் மொழியில் தங்களது அனுபவத்தை அதில் பதிவு செய்யலாம். ஜி20 உச்சிமாநாட்டிற்கும், முந்தைய ஆட்சியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன’ என்றார்.

தொடர்ந்து ஜி20 மாநாட்டில் பணியாற்றியவர்கள், தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கு இரவுநேர விருந்தும் வழங்கப்பட்டது. பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, நிகழ்ச்சியை பதிவு செய்து கொண்டிருந்த ஒளிப்பதிவாளர் ஒருவர் திடீரென கீழே விழுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஜி20 மாநாடு வெற்றிக்கு பாராட்டு விழா; மோடி பேசியபோது கீழே விழுந்த பணியாளர்: டெல்லியில் நேற்றிரவு பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : G20 Summit Victory Celebration ,Modi ,Delhi ,New Delhi ,G20 Summit Victory Congratulation Ceremony ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை..!!