
*அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.
அனைத்து துறை அலுவலர்களுடன் வடகிழக்கு பருவமழை துவங்குவதையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் தொடங்கப்பட வேண்டிய பணிகள் மற்றும் குறித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கலெக்டர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையொட்டி முன்னேற்பாட்டு நடவடிக்கையாக அனைத்து நீர் நிலையங்களிலும் கரைகளை பலப்படுத்தி மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைத்து தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
கடந்த காலங்களில் தொடர் மழையின் போது மழைநீர் வடிகால் மற்றும் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்ட பகுதிகள் மற்றும் தண்ணீர் தேங்கிய பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு தற்போது அதுபோன்ற நிலை ஏதும் ஏற்படாத வண்ணம் தேவையான நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறையின் மூலம் 108 பழுதடைந்த கட்டிடங்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 123 பழுதடைந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டு அப்புறப்படுத்துவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மரங்கள் அப்புறப்படுத்துவதற்கான உபகரணங்கள் பொக்லைன் வாகனங்கள் மற்றும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திருப்பதுடன், சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாலங்களில் உடைப்பு ஏற்படுதல் மற்றும் மரங்கள் சாய்தல் உள்ளிட்டவை நடந்தால் அவற்றை அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள தயார் நிலையில் இருந்திட வேண்டும். அதேபோல், வைகை வடிநிலக்கோட்டம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆறுகள் மற்றும் கண்மாய்களுக்கு மழைக்காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் கண்காணிப்பதுடன், வைகையில் வரக்கூடிய தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லாத வண்ணம் முன்கூட்டியே திட்டமிட்டு கண்மாய்களுக்கு அதனை கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மழைக்காலங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்வதுடன், அவ்வப்போது மருந்து தெளிக்கவும், குடிநீர் குளோரின் கலப்பதுஉள்ளிட்ட பணிகளை சீராக மேற்கொள்வது அவசியம். ஜெனரேட்டர் மற்றும் டேங்கர் லாரிகளை தயார் நிலையில் வைத்திட வேண்டும். மருத்துவத்துறையை பொறுத்தவரை அவசர சிகிச்சைக்கான அனைத்து கட்டமைப்புகளையும் தயார் நிலையில் வைத்திட வேண்டும். மழைக்காலங்களில் பொதுமக்கள் நலன் கருதி அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் தேவையான பொருள்களை இருப்பில் வைத்திட வேண்டும்.
அதேபோல் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைத்திட வேண்டும். தீயணைப்புத்துறையின் மூலம் பேரிடர் காலத்தில் மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் சரியாக வைத்திருப்பதுடன், மீன்வளத்துறையுடன் ஒருங்கிணைந்து நீச்சல் வீரர்கள் மற்றும் படகுகள் தயார்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலம் முன்கூட்டியே கள ஆய்வு செய்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்வதுடன், கூடுதலாக மின்கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளை தயாராக வைத்திருப்பதும் கட்டாயம். ஒவ்வொரு தாலுகாவிற்கும் பருவமழை பாதிப்புகளுக்கான கண்காணிப்பு அலுவலராக தனித்துணை ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இதன்படி முன்கூட்டிய ஆய்வுகளின் வாயிலாக வடகிழக்கு பருவமழையின் போது எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை திட்டமிட்டு செயல்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகள் மூலம் ராமநாதபுரம் தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் தீயணைப்புத்துறை வீரர்கள் கட்டிட இடிபாடுகளிலிருந்து, மாடியில் இருந்து, தண்ணீரிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பது மற்றும் திடீர் விபத்துகளில் சிக்கியவர்களை மீட்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனை கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் சாமிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து தொடங்குங்கள் appeared first on Dinakaran.