×

ஆத்தூர் அருகே தாமிரபரணி ஆற்றில் புதைந்த கட்டிடங்கள் அருகே முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

*நெல்லை பல்கலை. தொல்லியல் துறை மாணவர்கள் ஆய்வு

ஆறுமுகநேரி : ஆத்தூர் அருகே தாமிரபரணி ஆறு வறண்டதால் பல நூற்றாண்டுகளுக்கு முன்புள்ள கட்டிடங்கள் சிதைந்த நிலையில் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. இதனை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர். இதில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.

நெல்லை மாவட்டம் பாபநாசம் பொதிகை மலையில் உற்பத்தியாகி 2 மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் வளம் சேர்ப்பது தாமிரபரணி ஆறு. பொருநை நதி என்ற பெயரும் இதற்குண்டு. வற்றாத ஜீவநதி எனப் பெயர் பெற்ற தாமிரபரணி ஆறு, கடுமையான கோடை காலங்களில் மட்டும் சில இடங்களில் வற்றுமே தவிர எப்படியும் ஆற்றின் போக்கு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் தற்போது, தாமிரபரணி ஆறு ஸ்ரீவைகுண்டத்ைத கடந்து வறண்டு காணப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக இந்த நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில் ஆத்தூர் அருகே உள்ள முக்காணி தாமிரபரணி ஆற்றில் புதைந்துள்ள பழமையான கட்டிடங்கள் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது. இதனை நேற்று காலை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் சுதாகர் மற்றும் பேராசிரியர்கள் முருகன், மதிவாணன் ஆகியோர் தலைமையில் முதலாமாண்டு மாணவர்கள் 25 பேர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் ஆசைதம்பி குழுவினரும் ஆய்வு செய்தனர்.

இதில் சிதைந்த கட்டிடங்கள் சுமார் 350 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதும், கட்டிடங்களில் உள்ள தூண்களில் சிம்மம் மற்றும் அன்னப்பறவை வரிகள் இருப்பதும் தெரிகிறது. மேலும் இக்கட்டிடத்தின் அமைப்பு மற்றும் செங்கல், சுண்ணாம்பு, கல் தூண்கள் கொண்டு ஆய்வு செய்யும் போது 17ம் நூற்றாண்டில் சைவ சமணர்கள் வாழ்ந்த பகுதிகளாக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு ஜீயோ மெக்னைட்டிங் சர்வே எனப்படும் நிலத்திற்கு கீழ் ஆய்வு செய்யக்கூடிய இயந்திரம் மூலம் ஆய்வு செய்தனர். இதில் நிலத்திற்கு கீழ் கட்டிடம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தோண்டி ஆய்வு செய்தால் பல ஆண்டுகளுக்கு முன்புள்ள தமிழர்களின் வாழக்கை முறை மற்றும் வாணிப முறைகள் தெரிய வரும் என கூறப்படுகிறது.
இதேபகுதியில் சற்று தள்ளி சிதைந்த ஒரு மண்டபத்தின் பின்புறம் உள்ள பள்ளத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிட்டு அப்பகுதி முழுவதும் ஆய்வு செய்தனர்.

மேலும் தடயங்கள் ஏதும் தென்படுகிறதா என ஆய்வு செய்தனர். பின்னர் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் ஆசைத்தம்பி ஆய்வு செய்தபோது முதுமக்கள் தாழிபோன்ற வடிவத்தில் உள்ள அமைப்பு சுமார் 370 ஆண்டுகளுக்கு முன்பு கோடை காலத்தில் குடிநீர் சேமித்து வைக்கும் உறைகிணறாக இருக்கலாம் என தெரிவித்தார்.
ஆனாலும் இதனை முற்றிலும் தோண்டி அதன் வடிவத்தையும், அதற்குள் இருக்கும் பொருட்களை பொருத்தே உறுதிப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

அகழ்வாராய்ச்சி நடைபெறுமா?

தற்போது தாமிரபரணி ஆற்றங்கரையில் பல அரிய பொக்கிஷங்கள் இருப்பது வெளிவரத் தொடங்கி உள்ளது. வைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் பழமையான முதுமக்கள் தாழி, பண்டைய காலங்களில் மக்கள் பயன்படுத்திய அரிய ஆயுதங்கள், தங்க ஆபரணங்கள், மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. இதனால் இங்கு அரசின் ஏற்பாட்டில் அகழ்வாராய்ச்சி நடந்து வருவதோடு, ஆதிச்சநல்லூர் பெயர் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பரவிவருகிறது.

இங்கு பல வெளிநாட்டு ஆராய்ச் சியாளர்கள் வந்து ஆராய்ச்சி படிப்பு படித்து வருகின்றனர். தற்போது ஆத்தூர் அருகே 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் கட்டிடங்கள் தெரிந்துள்ளது. மேலும் நிலத்திற்கு கீழ் உள்ள கட்டிடங்களை ஆராய்ச்சி செய்தால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழமையான பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இது தாமிரபரணிக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமையும். எனவே ஒன்றிய மற்றும் மாநில அரசின் தொல்லியல் துறையினர் இப்பகுதி முழுவதையும் ஆய்வு செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

The post ஆத்தூர் அருகே தாமிரபரணி ஆற்றில் புதைந்த கட்டிடங்கள் அருகே முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamiraparani river ,Athur ,Nadelly University ,Atur ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சீரமைப்பு பணி மீண்டும் தொடக்கம்