×

சுருளகோட்டில் 10 செ.மீ. பதிவு குமரி மலையோர பகுதிகளில் கன மழை

*அணைகளுக்கான நீர் வரத்து அதிகரிப்பு

நாகர்கோவில் : குமரி மலையோர பகுதிகளில் கன மழை காரணமாக அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சுருளகோட்டில் 10 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்று காரணமாக தமிழகத்தின் மலையோர பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்தது. அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை மலையோர பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சுருளகோடு, புத்தன் அணை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகளுக்கான நீர் வரத்தும் அதிகரித்தது.

அதிகபட்சமாக சுருளகோட்டில் 106.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதாவது 10 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின் மலையோர பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி இருப்பது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. ஏற்கனவே கன்னிப்பூ சாகுபடிக்கு முறை வைத்து தான் தண்ணீர் வினியோகம் நடந்தது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் கும்ப பூ சாகுபடிக்கு எந்த வித பிரச்சினையும் இருக்காது என விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 19.40 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 984 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 39.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 561 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர் மட்டம் ஒரே நாளில் சுமார் 1 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. சிற்றார் 1 நீர் மட்டம் 11.35 அடியும், சிற்றார் 2, 11.44 அடியாகவும் உள்ளது. பொய்கை 9.50 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை 3.28 அடியாகவும் உள்ளது. முக்கடல் நீர் மட்டம் தொடர்ந்து மைனஸ் அளவில் உள்ளது. நேற்று காலை நீர் மட்டத்தின் அளவு மைனஸ் 13.50 ஆக இருந்தது. முக்கடல் அணை பகுதிகளிலும் நேற்று முன் தினம் பலத்த மழை பெய்துள்ளது. மழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.

மழை காரணமாக தற்போது கும்ப பூ சாகுபடிக்கான முன்னேற்பாடுகளையும் விவசாயிகள் தொடங்கி உள்ளனர். பல்வேறு இடங்களில் உழவு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. வட கிழக்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அனைத்து துறை அதிகாரிகளும் உஷார் நிலையில் இருக்கும்படி கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட கலெக்டர், பேரிடர் சமயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்களை பாதுகாக்க வேண்டும். தேவையான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் மருந்து வசதிகள் செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

The post சுருளகோட்டில் 10 செ.மீ. பதிவு குமரி மலையோர பகுதிகளில் கன மழை appeared first on Dinakaran.

Tags : Nagargo ,Kumari ,Dinakaran ,
× RELATED பெட்ரோல் நிலைய கழிவறைக்குள் காதல்...