×

சப்பாத்தியில் நெளிந்த பூச்சி-ஓட்டலை மூட அதிகாரிகள் உத்தரவு

ஈரோடு : ஈரோட்டில் அரசு மருத்துவமனை அருகே ஓட்டல் கடை ஒன்றில் சப்பாத்தியில் பூச்சி இருந்ததையடுத்து ஓட்டலை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஈரோடு திருநகர் காலனியை சேர்ந்தவர் ஜீவானந்தம். பாஸ்ட் புட் உணவகம் நடத்தி வருகிறார். இவரது மனைவியை பிரசவத்திற்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருக்கும் மனைவி மற்றும் தாயாருக்கு பெருந்துறை சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் 3 சப்பாத்தி பார்சல் வாங்கி கொண்டு சென்றார். பார்சலை திறந்தபோது சப்பாத்தியில் இருந்து பூச்சி நெளிந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக ஜீவானந்தம் மற்றும் உறவினர்கள் இது குறித்து நேரடியாக அந்த ஓட்டலுக்கு சென்று கேட்டனர். அப்போது மாற்று பார்சல் கொடுப்பதாகவும், இதை பெரிதுப்படுத்த வேண்டாம் என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பில் கூறி சமாதானப்படுத்த முயன்றனர்.ஆனாலும் ஜீவானந்தம் இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். சப்பாத்தியில் பூச்சி நெளிந்து செல்வதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

இந்நிலையில், நேற்று மதியம் சம்மந்தப்பட்ட ஓட்டல் கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஓட்டலின் சமையல் அறை சரிவர பராமரிக்கப்படாமலும், போதிய சுகாதாரம் இல்லாமலும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டலை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். குறைகளை நிவர்த்தி செய்த பிறகு உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பின்னர் ஓட்டல் திறக்க அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

The post சப்பாத்தியில் நெளிந்த பூச்சி-ஓட்டலை மூட அதிகாரிகள் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sabbathi ,Erode ,Erode Government Hospital ,Sabbatis ,Sabathi ,Dinakaran ,
× RELATED ஈரோடு அரசு மருத்துவமனை சர்ச்சை: மருத்துவருக்கு மெமோ