×

குறுவை விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35,000 வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: குறுவை விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35,000 வழங்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12 முதல் செப்டம்பர் மாதம் 15ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களில் சுமார் 5.50 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் 100 அடிக்குமேல் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக, தி.மு.க. அரசின் முதலமைச்சர், ஜூன் 12ம் தேதியே மேட்டூரில் இருந்து தண்ணீரைத் திறந்து விட்டார். ஆனால், போதுமான தண்ணீர் கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வராததால், செப்டம்பர் மாதம் 15ம் தேதி வரை குறுவை சாகுபடி முழுமைக்கும் தி.மு.க. அரசால் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்க முடியவில்லை. இதனால், சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், 21.9.2023 அன்று வேளாண்மைத்துறை மந்திரி, 2022-23ம் ஆண்டு சம்பா சாகுபடிக்காக 4 தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் சுமார் 2,319 கோடி ரூபாயை காப்பீட்டுத் தொகையாக செலுத்தி உள்ளதாகவும், கடந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்து பாதிப்படைந்த சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வெறும் 560 கோடி ரூபாயை மட்டுமே காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சம்பா சாகுபடி மேற்கொண்டு ஓராண்டுக்குப் பிறகு காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்ற இழப்பீட்டினை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் வேளாண்மைத்துறை மந்திரி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, 2021-22ம் ஆண்டு சம்பா சாகுபடியால் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு வெறும் 100 ரூபாய் முதல் 600 ரூபாய்வரை மட்டுமே காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு பெற்றுத் தந்ததாகவும்; பல விவசாயிகளுக்கு இழப்பீடோ, நிவாரணமோ வழங்கப்படவில்லை என்றும்; எனவே, 2022-2023ம் ஆண்டு சம்பா சாகுபடி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணத்தை பெற்றுத் தருமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி இருந்தேன்.

இந்நிலையில், சுமார் 2,319 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகை செலுத்தியுள்ள தி.மு.க. அரசு, வெறும் 560 கோடி ரூபாயை மட்டும் இழப்பீடாகப் பெற்றுள்ளது. எனவே, 2022-23ம் ஆண்டு சம்பா சாகுபடி மேற்கொண்டு, பாதிப்படைந்த வேளாண் நிலங்களை மீண்டும் ஒரு முறை முழுமையாக கணக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் முழுமையான இழப்பீட்டு (நிவாரணம்) தொகையினை பெற்றுத் தருமாறு வலியுறுத்துகிறேன். இந்த ஆண்டு குறுவை சாகுபடி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த விபரங்களை முழுமையாகக் கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகையாக ஏக்கர் ஒன்றிற்கு 35 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டுமென்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். மேலும், தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டுமென்று விவசாயிகள் வைத்த கோரிக்கையினை ஏற்று, அம்மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post குறுவை விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35,000 வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Edapadi Palanisamy ,Chennai ,CD ,Edapadi Palanisami ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...