×

ஈரோடு சென்னிமலையில் கிறிஸ்தவ குடும்பம் மீது தாக்குதல்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

ஈரோடு: ஈரோடு சென்னிமலையில் கிறிஸ்தவ குடும்பம் மீது தாக்குதல் நடத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், வசிக்கும் ஜான் பீட்டர் என்பவர் தன் வீட்டில், உறவினர், நண்பர்களோடு ஜெபம் நடத்துவது வழக்கம். இதை அறிந்த இந்து முன்னணியினர் செப்டம்பர் 17ஆம் தேதி, யாரும் அங்கு ஜெபம் செய்யக்கூடாது என்று வந்தவர்களை மிரட்டி இருக்கின்றனர். அச்சம் காரணமாக அனைவரும் திரும்பிப் போய்விட்டனர். ஆனால் ஜான் பீட்டர் மட்டும் தன் குடும்பத்தினருடன் வீட்டிற்குள் ஜெபம் செய்துள்ளார். அப்போது முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று கைகளில் கம்பு தடியோடு வாசலிலேயே காத்திருந்திருக்கின்றனர். ஜெபம் முடிந்து ஆறு பேர் வெளியில் வந்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் மீது கொலை வெறித் தாக்குதலை அந்தக் கும்பல் நடத்தி உள்ளது.

கிறித்துவ மத வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ஜான் பீட்டர் குடும்ப உறவினர்களைக் கொலை வெறிக் கொண்டு தாக்கியக் கும்பல், இந்து முன்னணியினர் என்று காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஒருவர் தன் வீட்டில் மத வழிபாடு செய்வது என்பது அவருடைய சொந்த விருப்பத்தைப் பொறுத்தது. அதனைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமைஇல்லை. மதவெறிக் கூட்டத்தின் இத்தகைய நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் காவிக் கும்பலின் மதவெறி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கிறித்துவ மத வழிபாட்டில் தலையிட்டு, கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் திட்டமிட்டு மதக் கலவரத்தை ஏற்படுத்தி, அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் மதவெறி அமைப்புகளின் அரசியல் நோக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post ஈரோடு சென்னிமலையில் கிறிஸ்தவ குடும்பம் மீது தாக்குதல்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Erode Chennimalai ,Madhyamik General Secretary ,Vaiko ,Erode ,Erode Sennimalai ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு; மாணவர்களை...