
சிவகங்கை, செப். 23:சிவகங்கை மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 18 அரசு தலைமை மருத்துவமனைகள், 48 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 4 நகர் நல மையங்கள், 4 இஎஸ்ஐ மருத்துவமனைகள் உள்ளன. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு ஒரு நாளைக்கு 48 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா காலத்தில் வறுமையில் உள்ளவர்கள் மற்றும் தொடர் நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாதவர்கள், முதியோர் ஆகியோருக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இங்கு பணிபுரியும் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் தேசிய தரச்சான்று பெற தகுதியுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் குறித்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர் அபிசேக்சின்வால் தலைமையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர் ருக்மணி ஆகியோரை கொண்ட மத்திய ஆய்வுக்குழு மற்றும் தமிழ்நாடு தர ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்தனர். சுமார் ஒரு வாரம் மருத்துவ சேவைகள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் இந்த ஆய்வு பணிகள் நடந்தது. இதில் சிவகங்கை அருகே இடையமேலூர் மற்றும் தேவகோட்டை அருகே கண்ணங்குடி ஒன்றியம் வெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை தேசிய தரச்சான்றிதழுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. விரைவில் இதற்கான சான்று வழங்கப்பட உள்ளது.
The post 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்றுக்கு தேர்வு appeared first on Dinakaran.