×

அப்பணநல்லூர் கிராமத்தில் துவரை நடவு முறை சாகுபடி தொழில் நுட்ப முகாம்

 

தொட்டியம், செப்.23: தொட்டியம் வட்டாரம் அப்பணநல்லூர் கிராமத்தில் வேளாண்மை துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் துவரை நடவு முறை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பா சிவக்குமார் தலைமை வகித்து, துவரை சாகுபடி செயல்விளக்கத்திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள் , மானிய விபரங்கள் குறித்தும் , உயிர் உரங்களின் பயன்கள், நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான ஆவணங்கள் வழங்கி பயன் பெறுமாறும், நிலக்கடலை விவசாயிகள் மானிய விலையில் ஜிப்சம் வாங்கி பயனடையுமாறுகேட்டு கொண்டார்.

தனியார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பயிர் நோயியல் பேராசிரியர் சேதுராமன் பயிற்சியில் கலந்து கொண்டு, துவரை சாகுபடியில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்களான தரமான விதைகளை தேர்ந்தெடுத்தல், விதை நேர்த்தி செய்து விதை விதைத்தல், 20ம் நாள் நுனி கிள்ளுதல், பூ பூக்கும் தருணத்தில் 2 சதம் டிஏபி கரைசல் தெளித்தல் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயறு வகை பயிர்களுக்கான நுண்ணூட்டச் சத்து பயறு ஒண்டர் தெளிப்பதின் அவசியம் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

இமயம் வேளாண் கல்லூரி பேராசிரியர் சுகுணா, துவரை நாற்று விட்டு நடவு சாகுபடி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், ரகங்கள், களை மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றியும் , ஊடுபயிராக துவரை சாகுபடி செய்தல் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். அட்மா திட்டத்தின் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகுந்தா வரவேற்று அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் பற்றியும், விவசாயிகள் அனைவரும் உழவன் செயலினை தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்து தகவல்களை பெற்று பயன்பெறுமாறு கூறினார்.

உதவி வேளாண்மை அலுவலர் கார்த்திக் பசுமை போர்வைக்கான இயக்கம் கீழ் குமிழ் தேக்கு, மலைவேம்பு, மகாகனி மற்றும் வேம்பு போன்ற மரக்கன்றுகளை இலவசமாக பெற்று வரப்பு பயிராகவும் தனி பயிராகவும் சாகுபடி செய்யலாம் என்றும், மேலும் இலவச மரக்கன்றுகள் பெற உழவன் செயலியில் பதிவேற்றம் செய்வது அவசியம் எனவும் கேட்டுக் கொண்டார்.  பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சரண்யா மற்றும் கீர்த்தனா செய்திருந்தார். அப்பணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post அப்பணநல்லூர் கிராமத்தில் துவரை நடவு முறை சாகுபடி தொழில் நுட்ப முகாம் appeared first on Dinakaran.

Tags : Appananallur ,Tankiyam ,Agriculture Technology Management Agency ,Department of Agriculture ,Atma ,
× RELATED தொட்டியத்தில் சூறாவளி காற்றுடன் மழை; 1 லட்சம் வாழை மரங்கள் முறிந்து நாசம்