×

நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத வகையில் மக்களவையில் பாஜ எம்.பி. ஆபாச பேச்சு: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

புதுடெல்லி: மக்களவையில் நடந்த விவாதத்தின்போது பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முஸ்லிம் எம்பி குறித்து பாஜ எம்.பி ரமேஷ் பிதுரி தகாத வார்த்தைகளை பயன்படுத்தி ஆபாசமாக பேசினார். நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இப்படி ஒரு ஆபாச பேச்சு அரங்கேறியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ரமேஷ் பிதுரி எம்.பியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை 4 நாட்களுக்கு நடைபெற்றது. இந்த சிறப்பு கூட்டத்தொடர் முதலில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும் பின்னர் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்திலும் செயல்பட்டது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த இந்த முதல் கூட்டத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் நேற்று முன்தினம் நடந்த சந்திரயான்-3 வெற்றி குறித்த விவாதத்தின்போது தெற்கு டெல்லி தொகுதி பாஜ எம்பி ரமேஷ் பிதுரி பேசினார். அவரது பேச்சு நாடாளுமன்றத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முஸ்லிம் எம்பி டேனிஸ் அலியை நோக்கி பாஜ எம்பி ரமேஷ் பிதுரி தகாத வர்த்தைகளை கூறினார். அவரது ஆபாச பேச்சு எதிர்க்கட்சி உறுப்பினர்களளை அதிர்ச்சியடையச் செய்தது.

அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், ரமேஷ் பிதுரிக்கு அருகில் அமர்ந்திருந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர்களும், பாஜ மூத்த தலைவர்களுமான ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷவர்தன் ஆகியோர் அவரது பேச்சை சிரித்தபடி கேட்டுக்கொண்டிருந்தனர். பின்னர், ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து நின்று , பாஜ எம்பி பிதுரி பேசியதற்காக மக்களவை உறுப்பினர்களிடம் வருத்தம் தெரிவித்தார். எனினும் உறுப்பினர்கள் இதனை ஏற்க மறுத்து முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து ரமேஷ் பிதுரியின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அவர் பேசிய வீடியோ காட்சி நேற்று காலை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுபோல ஆபாசமாக எந்தவொரு எம்.பி.யும் பேசியது இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு மாறிய சில நாட்களில் இப்படி ஒரு தகாத பேச்சு மக்களவையில் நிகழ்த்தப்பட்டிருப்பது வேதனையை ஏற்படுத்தியதாக அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். பாஜ எம்.பி ரமேஷ் பிதுரியை உடனடியாக மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சபாநாயகர் ஓம் பிர்லாவை கேட்டுக்கொண்டன. சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜ எம்பி பிதுரியிடம் வருங்காலத்தில் இப்படி நடந்து கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்துள்ளதாக மக்களவை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலி சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,‘‘ சந்திரயான் வெற்றி குறித்த விவாதத்தின்போது பாஜ எம்பி ரமேஷ் பிதுரி பேசியது குறித்து மிகுந்த வருத்தத்துடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். அவர் எனக்கு எதிராக மிக மோசமான, தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். சபாநாயகராக உங்களது தலைமையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இதுபோன்று நடந்தது மிகவும் துரதிஷ்டவசமானது. நாட்டின் சிறுபான்மையினத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு உண்மையில் மனவேதனை அளிக்கிறது. இந்த விஷயத்தை உரிமைக் குழு விசாரணைக்கு பரிந்துரைக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டேனிஷ் அலி, நாடாளுமன்றத்துக்கு வெளியே வெறுப்பு பேச்சுக்கள் பேசப்பட்டு வந்தது. தற்போது பாஜ எம்பி ஒருவரால் நாடாளுமன்ற அவையிலேயே இது நிகழ்ந்துள்ளது” என்றார்.

* இதுதான் பிரதமர் சொன்ன புதிய அத்தியாயமா? காங்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘பாஜ எம்பி ரமேஷ் பிதுரி பேசிய கருத்துக்கள் அனைத்து எம்பிக்களையும் அவமதிக்கும் செயலாகும். அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் கேட்டது வெறும் கண்துடைப்பு மற்றும் அரை மனதுடன் கேட்கப்பட்ட மன்னிப்பாகும். எம்பி பிதுரிக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவையில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் திறக்கப்பட்டபோது இது புதிய அத்தியாயம், புது சக்தி பாய்ச்சப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். இதுதான் பிரதமர் சொன்ன புதிய அத்தியாயமோ? ரமேஷ் பிதுரி பாஜவின் நோக்கம், திட்டம் என்பதை பகிரங்கமாக அம்பலப்படுத்திவிட்டார்” என்றார்.

* என்ன பேசினார் என்பது சரியாக கேட்கவில்லை: பாஜ எம்பிக்கள் நழுவல்
எம்பி ரமேஷ் பிதுரி பேசியபோது அவருக்கு பின் அமர்ந்திருந்த பாஜ எம்பி்க்கள் ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ்வர்தன் ஆகியோர் அதை ரசித்து சிரித்தபடி இருந்தனர். முன்னாள் ஒன்றிய அமைச்சர்களான அவர்கள் ரமேஷ் பிதுரியின் பேச்சை தடுக்காதது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுபற்றி ரவி சங்கர் பிரசாத்திடம் கேட்டபோது, அநாகரீகமான எந்த கருத்தையும் நான் ஆதரிக்கவில்லை. சிலர் என்னுடைய பெயரை இழுத்துள்ளனர். அவையில் நிலவிய குழப்பம் காரணமாக அவர் என்ன பேசினார் என்பதை தெளிவாக கேட்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார். மற்றொரு எம்பியான ஹர்ஷ்வர்தன் தனது டிவிட்டர் பதிவில், ‘‘நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், உள்ளேயும் கண்ணியமான நடத்தையை ஆதரிப்போம். உண்மையில் அவையில் என்ன பேசப்படுகிறது என்பதை என்னால் தெளிவாக கேட்க முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

* பாஜ நோட்டீஸ்
மக்களவையில் பகுஜன் சமாஜ் எம்பி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை பேசியது தொடர்பாக தெற்கு டெல்லி பாஜ எம்பியான ரமேஷ் பிதுரி விளக்கமளிக்க கோரி பாஜ மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

* நாடாளுமன்றத்தில் ஏற்படுத்திய கறை நீங்காது: தயாநிதிமாறன்
திமுக எம்பி தயாநிதிமாறன் தனது டிவிட்டர் பதிவில்,’ வீடியோக்களில் நீங்கள் பார்ப்பது நாடாளுமன்றத்தில் கேமராக்களைத் திருப்பும்போது என்ன நடக்கிறது என்பதில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. ரமேஷ் பிதுரி எதிர்கட்சியினருக்கு எதிராக முதன்முதலில் அவதூறாக பேசத்தொடங்கிய போது, அவையில் இருந்த ​​மூத்த பாஜ தலைவர்கள் வேறு பக்கம் பார்த்தனர். பெண்கள் மசோதா மீது கனிமொழி எம்பி பேசிய போது அவருக்கு எதிராக ரமேஷ் பிதுரி பேசிய போதும் அவரை கட்டுப்படுத்தவில்லை. சந்திரயான்3 வெற்றி குறித்து ஆ.ராசா பேச துவங்கியதும் பாஜ எம்.பி.க்கள் செய்த அவதூறு அர்ச்சனைகளையும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தடுக்கவில்லை. இதுவே நமக்கு எதிராக பேச அவருக்கு தைரியத்தை அளித்தது. அந்த இயல்பான நடவடிக்கையால்தான் ஒரு முஸ்லிம் மற்றும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த டேனிஷ் அலி எம்பிக்கு எதிராக ரமேஷ் பிதுரி மன்னிக்க முடியாத வார்த்தைப் பிரயோகத்தை மிக இயல்பாக செய்தார். இதை பாஜ தொடர்ந்து ஊக்குவித்து வந்தது. பா.ஜ எடுக்கும் எந்த அரைகுறை நடவடிக்கையும் நமது நாடாளுமன்றத்தில் ஏற்படுத்திய கறையை நீக்காது’ என்று பதிவிட்டுள்ளார்.

* கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்த ராகுல்காந்தி
பகுஜன் சமாஜ் கட்சி எம்பி குன்வர் டேனிஷ் அலியை காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் அவரது வீட்டில் நேற்று இரவு சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அப்போது டேனிஷ் அலியை கட்டியணைத்து ராகுல் ஆறுதல் தெரிவித்தார்.

* எம்பி பதவியை ராஜினாமா செய்வேன்
பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலி கூறுகையில்,’ பாஜ எம்பி ரமேஷ் பிதுரி தரக்குறைவாகப் பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், எம்பி பதவியை ராஜினாமா செய்வது குறித்து பரிசீலிப்பேன். இதுபோன்ற வெறுக்கத்தக்க பேச்சுக்களை கேட்பதற்காக மக்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. பிதுரி ஒட்டுமொத்த நாட்டையும் அவமானப்படுத்தியுள்ளார். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’ என்றார்.

The post நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத வகையில் மக்களவையில் பாஜ எம்.பி. ஆபாச பேச்சு: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Parliament ,Baja M ,New Delhi ,Baja ,Bhajan Samaj Party ,Ramesh Pituri ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை...