×

‘ஜீரோ’ விதி தேவையா?

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு கட்ஆப் மதிப்பெண்ணை ‘ஜீரோ’ என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு முடித்துவிட்டு முதுநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் பெறும் கட்ஆப் மதிப்பெண்ணை கொண்டே முதுநிலை மருத்துவப்படிப்புக்கு இடம் கிடைக்கும். தற்போது இந்த கட்ஆப் மதிப்பெண்ணைத்தான் ‘ஜீரோ’வாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புக்கான இடங்களில் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு சேர விருப்பம் காட்டவில்லை. அதனால் நிறைய இடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆண்டு இந்தியாவில் மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்கள் 64,059. இதில் 4,400 இடங்கள் காலியாகவே இருந்தன. 2021-22ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்கள் 60,202 ஆக இருந்தது. இதில், 3,744 இடங்கள் காலியாகவே இருந்தன. இதனால் தனியார் கல்லூரிகளுக்கு வருவாய் இல்லை. எனவே தனியார் கல்லூரிகளில் அனைத்து இடங்களையும் நிரப்பவே இந்த ‘ஜீரோ’ அறிவிப்பு என கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பு மாணவ, மாணவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில், ‘‘நீட் தேர்வின் பலன் ‘ஜீரோ’தான் என்று ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டுவிட்டது. கோச்சிங் சென்டர்களில் சேருங்கள். நீட் தேர்வுக்கு பணம் கட்டுங்கள் போதும் என்றாகிவிட்டது. நீட்=0’’ என குறிப்பிட்டுள்ளார். கல்வியாளர்களும் இந்த அறிவிப்பை விமர்சனம் செய்துள்ளனர். ‘‘நீட் தேர்வில் ‘நெகட்டிவ்’ மதிப்பெண் உண்டு. ‘ஜீரோ பெர்சண்டைல்’ என்பது ‘ஜீரோ’ மதிப்பெண் அல்ல. இருப்பதிலேயே கடைசி மதிப்பெண்.

அதாவது கடைசி மதிப்பெண் நெகட்டிவில் இருந்தாலும் அதுதான் ‘ஜீரோ பெர்சண்டைல்’. எனவே, ‘ஜீரோ’ மதிப்பெண்ணுக்கும் கீழ் ‘நெகட்டிவ்’ மதிப்பெண் எடுத்தாலும் சீட் உறுதி. இது தேவையா?’’ என்று விமர்சிக்கிறார்கள் கல்வியாளர்கள். ‘‘நீட் தேர்வில் அனைத்து கேள்விகளையுமே தவறாக எழுதி, 100 மதிப்பெண் பெற்றிருந்தாலுமே அது ஜீரோவுக்கு சமம். ஆக தேர்வு எழுதினாலே சீட் உண்டு என்றால், எதற்கு நீட் தேர்வு’’? என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ‘‘ஒரு காலத்தில் உண்மையான சேவை மனப்பான்மை கொண்ட அரசு மருத்துவருக்கு நல்ல போனஸ் மதிப்பெண் கிடைத்து மேற்படிப்புக்கான இடம் ஒதுக்கப்பட்டது.

அதையெல்லாம் பாழ் செய்துவிட்டு இந்த நீட் தேர்வு, மருத்துவ மேற்படிப்பை இந்த லட்சணத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறது’’ என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ‘‘நீட் தேர்வு வந்தால் தனியார் கல்லூரிகளின் பணக்கொள்ளை தடுக்கப்படும். தரமான மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்று வைக்கப்பட்ட வாதம் இந்த ‘ஜீரோ’ விதி அறிவிப்பால் அம்பலப்பட்டு நிற்கிறது’’ என்றும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் காலியாக உள்ள இடங்களை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த நடைமுறையை ஒன்றிய அரசு கொண்டுவந்திருப்பதாக கூறப்பட்டாலும் அரசின் இந்த அறிவிப்பு பெரும் குழப்பம் மிகுந்ததாகவே உள்ளது. இந்த ஆண்டு ஒன்றிய அரசால் இந்த குழப்பம். அடுத்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான நீட் தேர்வில் என்ன குழப்பத்தை செய்யப்போகிறார்களோ என்று மாணவ, மாணவிகள் தவித்தபடி உள்ளனர்.

The post ‘ஜீரோ’ விதி தேவையா? appeared first on Dinakaran.

Tags : Union Government ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...