
சென்னை: தமிழ்நாட்டிலுள்ள சிறு துறைமுகங்களை பல்வேறு வழிகளில் மேம்படுத்த அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 95வது வாரியக்கூட்டம் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழ்நாட்டிலுள்ள சிறு துறைமுகங்களை, பல்வேறு வழிகளில் மேம்படுத்த தமிழ்நாடு அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கடலூர் துறைமுக மேம்பாடு, நாகப்பட்டினத்திலிருந்து, இலங்கைக்கு விரைவு பயணியர் படகு போக்குவரத்து, கன்னியாகுமரி படகு அணையும் மேடை நீட்டிப்பு மற்றும் விவேகானந்தர் நினைவுப் பாறைக்கும், அய்யன் திருவள்ளுவர் சிலை பாறையை, தொங்குபாலம் மூலமாக இணைத்தல், துறைமுக மேம்பாட்டாளர்களை ஈர்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, கடல்சார் வாரிய வருவாயை பெருக்கும் நோக்கில் துறைமுக கொள்கையை உருவாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
* வெள்ள சீரமைப்பு பணிக்கு ரூ.105 கோடி ஒப்புதல்
சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலைகள் பராமரிப்பு மற்றும் தரமான சாலைகள் அமைப்பது குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு, ‘‘நிரந்தர வெள்ள சீரமைப்பின் 46 பணிகளுக்கு ரூ.105 கோடி நிர்வாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். கொளப்பாக்கம் சாலை, அணை ஏரி போன்ற இடங்களில் நடைபெற்று வரும் பணிகள் விரைந்து செயல்படுத்தி முடிக்கப்பட வேண்டும். மழை நீர் வடிகால் பணிகளை கண்டறிந்து விரைந்து முடிக்கப்பட வேண்டும். மேலும் இந்த ஆண்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள வடிகால்களில் வண்டல் மண்ணை பிடிக்கும் குழி பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி விரைந்து முடிக்கப்பட வேண்டும். எச்சரிக்கை பலகைகள், தகவல் பலகைகள், ஆகியவற்றின் இணைப்புகளில் உறுதித்தன்மை சரி பார்க்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
The post சிறு துறைமுகங்களை மேம்படுத்த முயற்சி: அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.