×

இலை தலைவரின் நிழலாக இருப்பவரின் செயலால் பல நிர்வாகிகள் கட்சி மாற காத்திருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலம் விஐபியின் நிழலாக செயல்படுபவரால் கட்சிக்குள் ஏக குழப்பமாமே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரின் நிழலாக இருப்பவரின் கை மாங்கனி மாநகரத்திலும் நீண்டிருக்காம். இவருக்கென தனியாக ஒரு கோஷ்டியை வளர்த்துக்கிட்டிருப்பதாக கட்சிக்காரர்களிடம் பேச்சு எழுந்திருக்காம். பட்டர் பிளை பாலம் இருக்கும் பகுதி நிர்வாகிகளில் முக்கிய பொறுப்புக்களில் இருப்பது அனைத்தும் அவரது ஆட்கள்தானாம். அவர்களைத் தாண்டி உழைக்கும் கட்சிக்காரர்கள் யாரும் முன்னுக்கு வரமுடியாதாம். ரெண்டு பகுதி, பேரவை என அனைத்தும் அவர்களிடம்தான் இருக்காம்.

எங்களை தவிர வேறு யாரும் உள்ளே வரமுடியாது, நாங்கள் பதவிக்கு… நீங்கள் உழைப்பதற்கு என்று கூறியே வருகிறார்களாம். அதிலும் நிழலானவரிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நிர்வாகிகள், மாநகர செயலாளரை மதிப்பதே இல்லையாம். பேரறிஞர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்ய சொல்லியும் மறுத்து விட்டார்களாம். இதற்கெல்லாம் காரணம் நிழலானவர் கொடுக்கும் தைரியம்தானாம். மாநகர செயலாளர் சொல்லியும் எதிர்த்து பேசுவது என்பது இந்த பகுதி இலைக்கட்சியில் மட்டும்தான் நடக்கும். நிழலானவரு இலைக்கட்சியின் தலைவருக்கு நெருக்கமாக இருக்கும் காரணத்தினால் மா.செ. எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டு அமைதியா போறார்.

இதே நிலை நீடித்தால் உழைக்கும் நிர்வாகிகள் வேறு கட்சிக்கு நடையைக் கட்டுவதை தவிர வேறு வழியில்லை என்று மாநகர ரத்தத்தின் ரத்தங்கள் புலம்புறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தாமரையில் சேர்ந்தவர்கள் எல்லாம் இப்போ தெறிச்சு ஓடுறாங்களாமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூங்காநகரில் இலைக்கட்சியிலிருந்து 2 மாஜி எம்எல்ஏக்கள் உட்பட சிலர், தாமரைக்கட்சிக்கு தாவினர். அக்கரைக்கு இக்கரை பச்சை என்பது போல, தாவியவர்களுக்கு தாமரை கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் செயல்பாடுகள் பிடிக்கவில்லையாம்… இவர்களில் சிலர் மீண்டும் இலைக்கட்சிக்கு செல்ல பிடிக்காமல் வெவ்வேறு கட்சிகளில் இணைந்தனர். 2 மாஜி எம்எல்ஏக்கள் உட்பட சிலர் மட்டும் இலைக்கட்சியில் இணைந்தனர்.

இதனையடுத்து கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களுக்கு வலை வீசும் முயற்சியில், நகர மாஜி அமைச்சர் உட்பட சிலர் தீவிரமாக உள்ளனர். தாமரை கட்சிக்கு சென்றவர்கள் வரிசையாக விலகி செல்வதன் மர்மம் குறித்து விசாரித்தபோது, தாமரைக்கட்சியின் மாவட்டத் தலைமையில் இருக்கிறவர், கட்சி தருகிற பணத்தையே செலவழிப்பதில்லையாம். இலைக்கட்சி உட்பட வேறு கட்சியிலிருந்து வந்தவர்களை செலவு செய்யுமாறு கூறி வருகிறார். கேட்டால் 10 வருஷம் ஆட்சி செஞ்சீங்கள்ல… காசு இருக்கும்ல… செலவழியுங்க… எங்கக்கிட்டே எல்லாம் காசில்லை என்கிறாராம்… ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் ஒரு கட்சி வளர்ச்சிக்கு நாம செலவழிப்பதா என பலரும் தெறிச்சு ஓடுவதாக தெரிய வந்துள்ளது.

இதைப் பயன்படுத்தி முக்கிய பொறுப்பு தருகிறோம் எனக்கூறி, பிரிந்து சென்றவர்களை இழுக்கும் பணியில் இலைக்கட்சி சீனியர்கள் களமிறங்க, கூட்டணியில ஏற்கனவே இருக்கிற பிரச்னை போதாதுன்னு இந்த வேலை வேற பார்க்குறீங்களா… என தாமரைக்கட்சி மாவட்ட தலைமை கொந்தளிப்பில் உள்ளாராம். விரைவில், தூங்கா நகரில் இரு கட்சியினரிடையே பெரிய மோதல் பிரச்னை வெடிக்கும் என பேசிக் கொள்கின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் மாங்கனி கட்சியினர் இடையே பனிப்போர் நீடிக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. இந்த மாவட்டத்தில் மாங்கனி கட்சி இடையே முட்டல் மோதல் குறித்துதான் தற்போது பேசப்பட்டு வருகிறது. மாங்கனி கட்சியில் மாவட்ட அமைப்பு செயலாளராக கடைசி எழுத்தில் முடியக்கூடிய கரன் என்பவர் இருந்து வருகிறார்.

டெக்ஸ்டைல்ஸ் மாவட்ட மாங்கனி சார்பில் நடத்தப்படும் கட்சி நிகழ்ச்சிகளில் அமைப்பு செயலாளர் கலந்து கொள்ளாமல் தனது ஆதரவாளர்களுடன் தனித்து செயல்பட்டு வருகிறார். கட்சியில் உள்ள தொண்டர்களை கூட மதிப்பது கிடையாது. சமீபத்தில் நடந்த இடஒதுக்கீட்டிற்காக வீரமரணம் அடைந்தவர்களுக்காக வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூட அமைப்பு செயலாளர் கலந்து கொள்ளாமல் எஸ்கேப் ஆகி விட்டார். கட்சி நிறுவனர் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் கூட அமைப்பு செயலாளர் கலந்து கொள்ளாமல் தனது ஆதரவாளர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

மாங்கனி கட்சியில் மாநில பொறுப்பில் இருந்த போது அமைப்பு செயலாளருக்கு கிடைத்த அங்கீகாரம் தற்போது அந்த பதவி முற்றிலும் கட்சியில் இருந்து எடுக்கப்பட்டது. பின்னர் முக்கியத்துவம் இல்லாத பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டதாலும், முன்புபோல டெக்ஸ்டைல்ஸ் மாவட்ட மாங்கனி கட்சி கட்டுப்பாட்டில் இல்லாதது போன்ற காரணங்களால் பாராமுகம் காட்டுவதாக தொண்டர்களுக்குள் பேசப்படுகிறது. அனைத்து பிரச்னைகளையும் களைந்து பிரிந்து கிடக்கும் அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் கட்சி இருக்க கூடும் என தொண்டர்கள் மத்தியில் இந்த டாப்பிக் தான் ஓடுகிறதாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காட்டுப்பாடி பதிவு ஆபிஸ்ல வில்லங்கம் அதிகமாக இருக்குதாமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல காட்டுப்பாடி தாலுகாவுல பொன்னா ஆறு கொண்ட ஏரியா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாடி சோளிங்கர் பத்திரப்பதிவு அலுவலக எல்லையில இருந்துச்சாம். அப்புறம் அந்த ெபான்னான ஆறு கொண்ட ஏரியாவை காட்டுப்பாடி பத்திரப்பதிவு அலுவலக எல்லைக்கு மாற்றிட்டாங்களாம். இதனால, பொன்னான ஆறு கொண்ட பகுதியை சேர்ந்த சுமார் 20 ஊராட்சிகள்ல பத்திரப்பதிவு, வில்லங்கச் சான்றுன்னு அனைத்து தேவைகளுக்கும் மக்கள் காட்டுப்பாடிக்குத்தான் போய்ட்டு வர்றாங்களாம்.

காட்டுப்பாடி பத்திரபதிவு ஆபிஸ்ல, வில்லங்க சான்று வாங்க போனா, உங்க டாகுமெண்ட், இங்க இல்ல, சோளிங்கர்ல தான் இருக்குதுன்னு சொல்லி அலைய விடுறாங்களாம். அப்புறம், நான் சொல்ற ஆள போய் பாருங்கன்னு புரோக்கரை கை காட்டி விடுறாங்களாம். அந்த புரோக்கரோ, வில்லங்கசான்றுக்கு 20 கே முதல் 30 கே வரைக்கும் கேட்குறாராம். அதோட, பத்திரத்தை பதிவு செய்ய போனா, நான் ெசால்றவங்ககிட்டதான் போய் பத்திரத்தை எழுதணும்னு ஆர்டர் போடுறாங்களாம். இப்படி காட்டுப்பாடி பத்திரப்பதிவு ஆபிஸ்ல தனி ராஜ்ஜியம் நடக்குதாம். துறை சார்ந்த உயர் அதிகாரிங்க விசாரிச்சு, பத்திரப்பதிவு ஆபிஸ்ல இருக்குற வில்லங்கத்தை சரி செய்யணும்னு கோரிக்கை எழுந்திருக்குது’’ என்றார் விக்கியானந்தா.

The post இலை தலைவரின் நிழலாக இருப்பவரின் செயலால் பல நிர்வாகிகள் கட்சி மாற காத்திருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : wiki ,Salem ,Uncle ,Peter ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை