×

முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

மொகாலி: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மொகாலி, பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஆஸ்திரேலியா 50 ஓவரில் 276 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் வார்னர் அதிகபட்சமாக 52 ரன் (53 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். ஜோஷ் இங்லிஸ் 45 ரன் (45 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்டீவ் ஸ்மித் 41, லாபுஷேன் 39, கேமரான் கிரீன் 31, ஸ்டாய்னிஸ் 29 ரன் விளாசி ஆட்டமிழந்தனர்.

கேப்டன் கம்மின்ஸ் 21 ரன்னுடன் (9 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் முகமது ஷமி 10 ஓவரில் 1 மெய்டன் உள்ப்ட 51 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். பும்ரா, அஷ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 277 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ருதுராஜ் கெயிக்வாட், ஷுப்மன் கில் இணைந்து துரத்தலை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. ருதுராஜ் 71 ரன் (77 பந்து, 10 பவுண்டரி) விளாசி ஸம்பா பந்துவீச்சில் வெளியேற, அடுத்து வந்த ஷ்ரேயாஸ் 3 ரன் எடுத்து ரன் அவுட்டானார்.

கில் 74 ரன் (63 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஸம்பா சுழலில் கிளீன் போல்டாகா, இந்தியா 151 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது. இஷான் கிஷன் 18 ரன் எடுத்து கம்மின்ஸ் வேகத்தில் விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் வசம் பிடிபட்டார். எனினும், கேப்டன் ராகுல் – சூரியகுமார் ஜோடி 5வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 80 ரன் சேர்த்தது. சூரியா 50 ரன் (49 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். இந்தியா 48.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன் எடுத்து வென்றது. ராகுல் 58 ரன் (63 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஜடேஜா 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. தரப்பில் ஸம்பா 2, கம்மின்ஸ், அபாட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் நாளை நடக்கிறது.

The post முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,Australia ,Mohali ,Punjab Cricket Association ,Dinakaran ,
× RELATED மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி