×

மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்திய ஜனநாயகம் பலவீனமாகி வருகிறது..! ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி உரை

புதுடெல்லி: மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்திய ஜனநாயகம் பலவீனமாகி வருவதாக ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல்காந்தி உரையாற்றினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் நார்வே சென்றிருந்தார். அப்போது ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையின் வீடியோவை காங்கிரஸ் கட்சி தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ராகுல்காந்தி ஆற்றிய உரையில், ‘இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று பிரதமர் மோடி மாற்றினால், எதிர்க்கட்சியான ‘இந்தியா’ கூட்டணியும் அதன் பெயரை மாற்றும். பின்னர் பிரதமர் மோடி, இந்தியாவின் பெயரை மாற்றுவாரா? ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் எந்தவொரு தலைவரும், இந்தியாவில் நடக்கும் ஜனநாயகத்தின் கொலையை பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

நாட்டின் முக்கிய நிறுவனங்களை ஆர்எஸ்எஸ் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம். இரண்டு, மூன்று நிறுவனங்களே இந்தியாவின் ஏகபோக உரிமையை அனுபவிக்கின்றன. கடந்த 9 ஆண்டுகளில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சுகாதாரம், கல்விக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மகாத்மா காந்தி, கவுதம புத்தர், குருநானக் ஆகியோரின் சித்தாந்தத்திற்காக போராடுகிறேன். எதிர்காலத்திற்கான கருத்தியல் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். கடந்த 2014ம் ஆண்டில் பாஜக ஆட்சிக்க வந்த பின்னர், பாஜகவின் சித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் மக்களின் குரல்கள் நசுக்கப்படுகிறது. அவை ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது. மக்கள் தொகையில் பெரும் பகுதியினரை பேச அனுமதிப்பதில்லை. அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். என் மீது 24 வழக்குகள் உள்ளன; 55 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன். எனக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது, இந்தியாவில் முதல் முறையாக, கிரிமினல் அவதூறுக்காக ஒருவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது. ஜனநாயக அமைப்புகள் மீதான தாக்குதல், மக்களின் குரலை ஒடுக்குதல் போன்றவற்றை எதிர்த்து போராட வேண்டியுள்ளது. மக்களை நேரடியாக சென்று சந்திப்பே எதிர்க்கட்சிகளிடம் இருக்கின்ற ஒரே கருவி. அதைத் தான் செய்கிறோம்’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

The post மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்திய ஜனநாயகம் பலவீனமாகி வருகிறது..! ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி உரை appeared first on Dinakaran.

Tags : India ,Modi ,Raqul Gandhi ,University of Oslo ,New Delhi ,Rakulkandi ,Ragul Gandhi ,
× RELATED ஒன்றிய அரசின் கொள்கைகளால்...