×

நந்தவனப் பிள்ளையார்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிவாலயங்களின் பிராகாரங்களில் மணம் பரப்பும் மலர்வனங்களை உருவாக்கிப் போற்றி வந்தனர். இவற்றிற்கு நந்தவனம் என்பது பெயராகும். அன்பர்கள் அதிகாலையில், நந்தவனங்களுக்குச் சென்று பூக்களைப் பறிப்பது வழக்கம். அப்படி பறிப்பதற்கு முன்பாக, விநாயகரை வழிபடுவர். அதற்கென நந்தவனத்தில் சிறிய மேடை மீது விநாயகப் பெருமானை நிலைப் படுத்தியுள்ளனர். இவரை நந்தவனப் பிள்ளையார் என்பர். மலர்வனங்களில் பூப்பறிப்பது என்பது எளிதானதல்ல. பூச்செடிகளில் வண்டுகள் இருக்கும். செடிகளின் குளிர்ச்சியை விரும்பித் தேள், நட்டுவாக்காலி, பூரான் போன்றவையும் நந்தவனத்தில் இருக்கும். ஜாதிமல்லி, பவழமல்லி, மனோரஞ்சிதம் போன்ற அதிகமணம் பரப்பும் மலர்ச் செடிகளின் கிளைகளில், மலர்களின் வாசனையை விரும்பிப் பாம்புகள் இருக்கும்.

அவற்றால் பூப்பறிப்பவர்க்குத் துன்பம் நேரலாம். கிளைகளைத் தாழ்த்திப் பூப்பறிக்கும் போது செடிகளுக்கு நடுவேயுள்ள காய்ந்த கிளைகள் குத்திக் கிழிக்க வாய்ப்பு இருக்கிறது. பனிக் காலங்களில் மரங்களில் ஏறும் போது வழுக்கி விழநேரும். செடிகளுக்கு இடையே முட்கள் இருந்து குத்திவிடலாம். இதுபோன்று பல இடர்ப் பாடுகள் இருக்கின்றன. இத்தகைய துன்பங்கள் எதுவும் நேராமல், மன மகிழ்ச்சியுடன் பூக்களைப் பறித்துப் புண்ணியம் பெற, பூ எடுக்கும் முன் விநாயகரை வழிபட்டனர். நந்தவன விநாயகர், அன்பர்களுக்கு அருள்புரிவதுடன் மலர் வாசனையில் திளைத்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார். திருவண்ணாமலை, திருவாரூர் முதலிய தலத்து நந்தவனங்களில் விநாயகர் சந்நதி சிறப்பாக இருக்கிறது.

லட்சுமி விநாயகர் சரஸ்வதி விநாயகர்

காசியில் விஸ்வநாதர் ஆலயத்தின் வடகிழக்கு முனையில் அமைந்த சந்நதியில், மகாலட்சுமியின் கம்பீரமான திருவுருவத்தைத் தரிசிக்கிறோம். இவருக்கு முன்பாக சிறிய வடிவில் கணபதி விளங்குகிறார். இவரை `லட்சுமி கணபதி’ என்கின்றனர்.

காசியில் செனசட்டிகாட், ராணாமஹாலில் உள்ள, வக்ரதுண்ட விநாயகரை `சரஸ்வதி கணபதி’ என்கின்றனர். லட்சுமி, செல்வத்தின் கடவுளாகவும், சரஸ்வதி அறிவைத் தந்தருளும் தெய்வமாகவும் விளங்குகின்றார்.

அதனால், செல்வத்தை அருளும் வேளையில் திருமகளின் அருகில் அமர்ந்து லட்சுமி கணேசராகவும் அறிவைப் பிரகாசிக்கச் செய்யும் கல்வியை அருளும் வேளையில் சரஸ்வதியோடு அமர்ந்து சரஸ்வதி விநாயகராகவும் காட்சி தருகிறார். காசி மாநகரில் விநாயகர் லட்சுமி கணபதியாகவும், சரஸ்வதி விநாயகராகவும் காட்சி தருகிறார். சைவ ஆகமங்களில் வாயிலின் நிலை மீது விநாயகருடன் சரஸ்வதி லட்சுமி ஆகிய இருவரையும் அமைக்கும்படி சொல்லி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

முண்ட விநாயகர்

முண்டம் என்ற சொல், உடலற்ற தலையைக் குறிக்கும். உடலைப் பூமியில் மறைத்துக் கொண்டு தலையை மட்டும் வெளியே நீட்டித் தவத்தில் மூழ்கியவாறு தம்மை வழிபடும் அன்பர்களுக்கு அருள்பாலிக்கும் தெய்வங்கள் இருக்கின்றனர். தென்னகத்தில் இருக்கும் பெரும்பாலான மாரியம்மன் திருவுருவங்கள் தலையை வெளிக் காட்டி உடலை பூமிக்குள் மறைத்துக் கொண்டு காட்சியளிக்கின்றனர்.

சிவபெருமான், பூமிக்குள் மறைந்து முகத்தைக் காட்டும் பெருமானாக இல்லாவிட்டாலும், சிவலிங்கங்களுக்குச் சிவபெருமானின் முகத்தை மட்டும் கவசமாகச் செய்து அணிவிக்கும் வழக்கம் உள்ளது. இதுபோல் மற்ற தெய்வங்களை வழிபடும் வழக்கமில்லை. குறிப்பாக, விநாயகரை வழிபடும் வழக்கமில்லை என்றாலும், காசிக் கண்டத்தில் முண்ட விநாயகர் என்னும் பெயரில் ஒரு விநாயகர் குறிக்கப்பட்டுள்ளார்.

அவர் உடலை பூமியில் மறைத்துக் கொண்டு முகத்தைக் காட்டும் விநாயகர் என்று காசிக் கண்டம் கூறுகிறது. இவர் விநாயகரின் இரண்டாவது ஆவரணத்தில் உத்தண்ட விநாயகருக்கு அக்னி கோணத்தில் திரிலோசனருக்குப் பக்கத்தில் பாராணாஸி தேவி கோயிலில் எழுந்தருளியுள்ளார்.

தொகுப்பு: நாகலட்சுமி

The post நந்தவனப் பிள்ளையார்! appeared first on Dinakaran.

Tags : Nandavan ,Nandavanam ,Nandavanap Pilliyar ,Dinakaran ,
× RELATED ஆண்டாள் அரங்கனை ஆண்டாள்