×

வடகிழக்கு பருவமழையின் காரணமாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை: சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வுக் கூட்டம் நடத்தினார்கள். இந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில், சாலைகள் பராமரிப்பிற்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும், தரமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் 19.9.2023 அன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தெரிவித்தார்கள்.

சாலைகளை பராமரிப்பது கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் முக்கிய பணியாகும். பராமரிப்பு பணிகளுக்கு அனைத்து பொறியாளர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். முதலமைச்சரின் விபத்தில்லா தமிழகம் என்ற இலக்கை அடைய சாலைகள், பள்ளமில்லா சாலைகளாக பராமரிக்கப்பட வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலைகளாக இருந்தாலும், அவற்றில் குழிகள்(pot holes) இருப்பின் அதை ஆய்வு செய்து, சீர் செய்ய திட்ட இயக்குநர் மற்றும் மண்டல அலுவலர் ஆகியோரிடம் அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

தமிழ்நாடு சால மேம்பாடு திட்டம், சென்னை – கன்னியாகுமாரி சாலை மேம்பாடு திட்டம் போன்ற திட்டங்களில் செயல்படுத்தப்படும் சாலைகளில், தார்சாலை போடும் வரை போக்குவரத்துக்கு ஏற்றவாறு சாலைகளை பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்கத் தவறும் பட்சத்தில், அது குறித்த தகவல்களை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகை சேர்ந்த பொறியாளர்கள், உடனடியாக கண்டறிந்து அதனைத் தலைமை பொறியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். சாலைகளில் உள்ள வேகத்தடைகளை வர்ணம் பூசி தேவையான அறிவிப்பு பலகைகள் அமைத்து, விபத்துக்கள் ஏற்படா வண்ணம் பராமரிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

சாலை பாதுகாப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். சாலையில் உள்ள மரங்களுக்கு கருப்பு வெள்ளை வர்ணம் அடித்தல், போன்ற பணிகளை செய்து விபத்து ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். சாலை ஒரங்களில் உள்ள ஆபத்தான, உடையும் நிலையில் உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டும். சாலைப் பணிகளை தரமாக செயல்படுத்துவதை தாரக மந்திரமாக கொண்டு பொறியாளர்கள் பணியாற்ற வேண்டும். அனைத்து பணிகளுக்கும் பணபட்டுவாடா செய்யும் முன் தர கட்டுப்பாட்டு பிரிவு அலுவலர்களின் அலுவலர்களைக் கொண்டு தரத்தினை உறுதி செய்து கொண்ட பின்பே பண பட்டுவாடா செய்ய வேண்டும்.

ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை அலகில் உள்ளது போல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு மற்றும் பிற அலகுகளில் செயல்படுத்தப்படும் பணிகளிலும் தர கட்டுப்பாட்டு அலுவலர்களின் அறிவிக்கையை அளவு புத்தகங்களில் அளவீடு பதிவு செய்ய வேண்டிய அவசியம் குறித்து எடுதுரைத்தார்.மேம்பாட்டு பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களிடம் சாலைகளை ஒப்படைத்த பின், அச்சாலைகளில் ஏற்படும் நொடிகளை அவ்வப்போது சீர் செய்து, பணி முடிக்கும் வரை பள்ளமில்லா சாலைகளாக பராமரிக்க வேண்டிய பொறுப்பு அந்த ஒப்பந்ததாரருக்கு உள்ளது, அதை உறுதி செய்ய வேண்டியது அந்த பொறியாளரின் கடமையாகும், இவ்வாறாக இல்லாமல் அந்த ஒப்பந்ததாரர் தார்பணி செய்யும் வரை பள்ளங்களுடன் சாலைகள் வைத்துக் கொண்டிருப்பது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது.

பணிகள் செயலாக்கத்தின் போது, சாலை பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பணி நடைபெறும் இடங்களில் சாலை பாதுகாப்பு உறுதி செய்வதை சாலை பாதுகாப்பு அலகில் உள்ள பொறியாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து அதை உறுதி செய்ய வேண்டும். பணிகள் நடைபெறும் பொழுது விபத்துக்கள் ஏற்பட்டு அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

* அமைச்சர் அவர்கள், பருவ மழைக்கு முன்பாக கீழ்கண்டவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார்கள்:

நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே (அதாவது அக்டோபர் மாதம்) முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், மெட்ரோ, கழிவுநீரகற்று வாரியம் போன்ற பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களின் மறுசீரமைப்புப் பணிகளை முடிக்கப்பட வேண்டும். பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து உடனடியாக பணிகளை செயலாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சாலைகளை தோண்ட அனுமதி அளிக்கக் கூடாது.

அனுமதிக்கப்பட்ட சாலைகளில் தோண்டும் பணிகள் அனைத்திலும் அக்டோபர் மாதத்திற்குள் மறுசீரமைப்புப் பணிகளை முடிக்கப்பட வேண்டும். மழைநீர் வடிந்து செல்ல ஏதுவாக உயர்மட்ட புருவங்களை வெட்டுதல், தாழ்ந்த புருவங்களை நிரப்புதல் போன்ற பணிகளை செய்ய வேண்டும். பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள், வடிகால்களில் உள்ள செடிகள், முட்புதர்கள் போன்ற தடைகள் நீக்கப்பட வேண்டும். மலைப்பகுதிகளில் அமைந்துள்ள சாலைகளில் உள்ள (Catch pit) பிடிக்குழி, வடிகால் போன்றவற்றை மழைநீர் வடிந்து செல்ல ஏதுவாக நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். மழை பெய்தவுடன் கள ஆய்வு செய்து எங்கு மழைநீர் தேங்குகிறது எங்கு மழை நீர் சாலையைக் கடக்கிறது போன்றவற்றை ஆய்வு செய்து அவற்றை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மின் அறுவை இயந்திரம், ஜெனரேட்டர், மின்சார நீரேற்று பம்புகள் மற்றும் லாரிகள் போன்ற அனைத்து இயந்திரங்களையும் உடனடியாகக் கொண்டு செல்ல ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவை அடிப்படையில் மணல் பைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் மேலாண்மைத் திட்டம் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்படக்கூடிய இடங்களை அடையாளங்கண்டு முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும். அவசர கால பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

மழைக்காலத்தில் வாகன சுரங்கப்பாதைகள் மற்றும் பாதசாரிகளின் சுரங்கப்பாதைகளில் நீர் தேங்குவதைத் தவிர்க்க தேவையான நீரேற்று பம்புகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். மேலும், அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை, ஜவகர்லால் நேரு சாலை கத்திப்பாரா முதல் கோயம்பேடு வரை, ஜெனரல் பீட்டர்சன் சாலை, காந்தி இர்வீன் பாலம், திருவள்ளுவர் சாலை, இராமபுரம் சாலை, கொளத்தூர் சாலை, சென்னை தினத்தந்தி அலுவலகம் முன்பாக போன்ற இடங்களில் நடைபெறும் பணிகளை போர்க்கால அடிப்படையில் அடுத்த 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.

இந்த வருடம் நிரந்தர வெள்ள சீரமைப்பு பணிகளுக்காக 46 பணிகளுக்கு 105 கோடி ரூபாய் மதிப்பில் நிர்வாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அனைத்துப் பணிகளும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். கொளப்பாக்கம் சாலை, அணை ஏரி போன்ற இடங்களில் நடைபெற்று வரும் பணிகள் விரைந்து செயல்படுத்தி முடிக்கப்பட வேண்டும். மழை நீர் வடிகால் பணிகளை கண்டறிந்து விரைந்து முடிக்கப்பட வேண்டும் மேலும் இந்த ஆண்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள வடிகால்களில் வண்டல் மண்ணை பிடிக்கும் குழி பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி விரைந்து முடிக்கப்பட வேண்டும். எச்சரிக்கை பலகைகள், தகவல் பலகைகள், ஆகியவற்றின் இணைப்புகளில் உறுதித்தன்மை சரி பார்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள்.

முத்தமிழ் அறிஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய 100 இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், 100 இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள், 100 சிறு பாலங்களை புனரமைத்தல் போன்ற பணிகளை திட்டமிட்டவாறு செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். இந்த வருடம் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்ட நாபர்ட், சிஆர்ஐடிபி, சிம்டிபி, போன்ற பல்வேறு திட்டங்களில், அனைத்து அலகுகளில் உள்ள பணிகளுக்கு மதிப்பீடுகள் தயாரித்து, ஒப்பந்த புள்ளியில் கோரப்பட்டு விரைவாக பணிகள் துவங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

இந்த ஆண்டு நெடுஞ்சாலை துறைக்கு 17 ஆயிரத்து 255 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 31.7.2023 வரை, 4 ஆயிரத்து 497 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதாவது சுமார் 26% மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, டிசம்பருக்கு முன்பாக 80 சதவீதம் செலவினத்தையும், நிதி ஆண்டு இறுதியில் நிதி ஒப்படைப்பு சரண்டர் ஏதுமின்றி, 100 சதவீத செலவீனத்தை அடையும் வகையில் அனைத்து அலகுகளில் உள்ள பொறியாளர்களும் திட்டமிட்டு செயல் ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

இக்கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், பிரபாகர், முதன்மை இயக்குநர், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர், மற்றும் அனைத்து தலைமைப் பொறியாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வடகிழக்கு பருவமழையின் காரணமாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,AV Velu ,North East Monsoon ,CHENNAI ,Guindy Highway Research Station ,Northeast Monsoon ,
× RELATED வடகிழக்கு பருவமழை குண்டும் குழியுமான...