சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் படகு குழாம்களில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 5 மாதங்களில் மொத்தம் 24,17,436 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டுள்ளனர் என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள சுற்றுலா வளாக அலுவலகத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த சுற்றுலாத்துறை அலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மேலும், கடந்த 16ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தென்னிந்திய சமையல்காரர்கள் சங்கத்தினர் நடத்திய சமையல் போட்டியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் தமிழ்நாடு சமையலர்கள் ஒரு தங்கப்பதக்கம் மற்றும் 3 வெள்ளி பதக்கங்களை வென்றனர். இதையொட்டி, தங்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்களை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கி வாழ்த்துப் பெற்றனர். இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் கூறுகையில் : சாகச படகு சவாரி மற்றும் நீர் விளையாட்டுகளுடன் கூடிய படகு குழாம்களை முட்டுக்காடு, முதலியார் குப்பம், உதகமண்டலம், பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், குற்றாலம் மற்றும் வாலாங்குளம் ஏரி உள்ளிட்ட 9 இடங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படகு குழாம்களை இயக்கி வருகிறது.
வாட்டர் ஸ்கூட்டர்கள், மோட்டர் படகுகள், விரைவு படகுகள், மிதிப்படகுகள், துடுப்பு படகுகள், வாட்டர் சைக்கிள்கள், குழந்தைகளுக்கான மிதிப்படகுகள் என மொத்தம் 588 படகுகள் சுற்றுலா பயணிகளுக்கு அளித்து வருகின்றன. 2022-23ம் நிதியாண்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் படகு குழாம்கள் மூலமாக இயக்கப்படும் படகுகளில் மொத்தம் 42,22,945 சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
2023-24ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதங்களில் மட்டும் மொத்தம் 24,17,436 சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடைய சுற்றுலா வளர்ச்சித்திட்டப் பணிகள் விரைந்து முடிவடையும் வகையில் அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் சுற்றுலா செயலாளர் மணிவாசன், இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுமேலாளர் கமலா உள்பட சுற்றுலாத்துறை அலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர்கள், மேலாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post கடந்த 5 மாதங்களில் படகு குழாம்களில் 24.17 லட்சம் பயணிகள் படகு சவாரி: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.