×

தமிழ்நாட்டிலுள்ள சிறு துறைமுகங்களை, பல்வேறு வழிகளில் மேம்படுத்திட தமிழ்நாடு அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: சென்னை, தலைமைச் செயலகத்தில், இன்று (22.9.2023) நாமக்கல் கவிஞர் மாளிகையில், 5வது தளத்தில் உள்ள கூட்டரங்கத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 95வது வாரியக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கடல்சார் வாரியத்தின் உறுப்பினர்கள் பங்கு பெற்றார்கள். கடல்சார் வாரியக் கூட்டத்தை துவக்கி வைத்து அமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 95வது கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை மற்றும் அனைத்து வாரிய உறுப்பினர்களையும் வரவேற்றார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள சிறு துறைமுகங்களை, பல்வேறு வழிகளில் மேம்படுத்திட தமிழ்நாடு அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கடலூர் துறைமுக மேம்பாடு, நாகப்பட்டினத்திலிருந்து, இலங்கைக்கு விரைவுப் பயணியர் படகு போக்குவரத்து, கன்னியாகுமரி படகு அணையும் மேடை நீட்டிப்பு மற்றும் விவேகானந்தர் நினைவுப் பாறைக்கும், அய்யன் திருவள்ளுவர் சிலை பாறையை, தொங்குபாலம் மூலமாக இணைத்தல், துறைமுக மேம்பாட்டாளர்களை ஈர்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, கடல்சார் வாரிய வருவாயினை பெருக்கும் நோக்கில் துறைமுக கொள்கையை உருவாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்கள்.

எனவே தமிழ்நாட்டிலுள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்துவதற்கும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் வளர்ச்சிக்கும், தாங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டும் என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

இக்கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் எஸ்.நடராஜன், போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்திரரெட்டி , தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் இ.சுந்தரவள்ளி, நிதித்துறை இணைச் செயலாளர் எச்.கிருஷ்ணன் உன்னி, சிறப்பு அழைப்பாளர்கள், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கட்ராம் சர்மா மற்றும் வணிகக் கடல்துறை, சென்னை (மைய அரசின் பிரதிநிதி, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சம்) கே.எம்.ராவ், மாநில துறைமுக அலுவலர் கேப்டன் எம்.அன்பரசன், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கடலோர கமாண்டர் ரவிக்குமார் தினகரா, கடலோர காவல் படை தலைவர் எம்.எஸ்.ரவாத், மற்றும் வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாட்டிலுள்ள சிறு துறைமுகங்களை, பல்வேறு வழிகளில் மேம்படுத்திட தமிழ்நாடு அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Tamil Nadu ,Minister ,AV Velu ,Chennai ,Namakkal Kavinjar House ,Dinakaran ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...