×

டெங்கு காய்ச்சல் பீதி எதிரொலி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட நகர் மற்றும் கிராமபுறங்களில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பலர் பாதிக்கப்பட்டனர். இதில், ஒரு சிலர் இறந்த சம்பவமும் நடந்தது. டெங்கு பீதியால் அந்நேரத்தில் பொதுமக்களிடையே பெருமளவு அச்சம் ஏற்பட்டது. அதன்பின், கடந்த இரண்டு ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு என்பது சொற்ப அளவிலே இருந்தது. நகர் மற்றும் கிராமபுறங்களில் தீவிர சுகாதார நடவடிக்கையால், டெங்குவால் இறந்தவர்கள் யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டில், பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் பருவமழை மிகவும் குறைவாக இருந்தாலும், அதன்பின் கடந்த இரண்டு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இருப்பினும், தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு இருப்பதுபோல், கடந்த சில வாரமாக, பொள்ளாச்சி அருகே ஒருசில கிராமத்தில் டெங்கு பீதி ஏற்பட்டது.

இதனால், அரசு மருத்துவமனையில், ஒரு வகை வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று சென்றவர்களின் எண்ணிக்கை அதிகமானது. கடந்த மாதத்தை காட்டிலும், இந்த மாதத்தில் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் என சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. இதில், ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. அவருக்கு தீவிர கிச்சையால், அண்மையில் குணமடைந்து சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார். இருப்பினும், டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால், பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் ஒரு கட்டிடத்தில் சுமார் 50 படுக்கைகள் கொண்ட தனி வார்டு தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு, காய்ச்சல் என வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா கூறுகையில்,“பொள்ளாச்சி பகுதியில், பருவமழை குறைவாக பெய்து அடுத்து வெயிலின் தாக்கமும், விரைவில் வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ளதாலும், ஒருவகை வைரஸ் காய்ச்சல் ஏற்படலாம். அதனை டெங்கு காய்ச்சல் என என்னி விட கூடாது. இருப்பினும், யாருக்கேனும் காய்ச்சல் உள்ளிட்டவை இருநதால், மருந்து கடைகளில் தானே மருத்துவம் பார்ப்பதை தவிர்த்து, அந்தந்த பகுதி அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற்று செல்ல வேண்டும். பொள்ளாச்சி அரசு மரத்துவமனையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக தனி வார் டு ஏற்படத்தப்ப்பட்டுள்ளது. அங்க ஒரு டாக்டர், ஒரு கண்காணிப்பாளர் 4 செவிலியர்கள் எப்போதும் இருப்பர். முற்றிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக, தமிழ்நாடு அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய கிகிச்சை அளிக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார்.

 

 

The post டெங்கு காய்ச்சல் பீதி எதிரொலி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Govai District ,Pollachi Revenue Fort ,Dinakaran ,
× RELATED நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்